காபன் வரிக்கு பதிலாக நிவாரணத்துடனான புதிய வேலைத்திட்டமொன்றை நடைமுறைப்படுத்த தீர்மானம்
Related Articles
காபன் வரிக்கு பதிலாக வாகன உரிமையாளருக்கு நிவாரணத்துடனான புதிய வேலைத்திட்டமொன்றை நடைமுறைப்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. குறித்த வேலைத்திட்டத்தை திறைசேரி தற்போது வகுத்திருப்பதாக போக்குவரத்து அமைச்சின் செயலாளர் எல்.பி.ஜயம்பதி தெரிவித்துள்ளார்.
இதற்கமைய வாகன புகை வெளியேறுவதற்கான சான்றிதழ்களை விநியோகிக்கும் பிரதிநிதிகளுக்கும் அமைச்சர் அர்ஜுண ரணதுங்கவுக்கும் இடையிலான பேச்சுவார்த்தை எதிர்வரும் புதன்கிழமை இடம்பெறவுள்ளது. இந்த வருடத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட காபன் வரி தொடர்பில் வாகன உரிமையாளர்களிடம் இருந்து பல்வேறு முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன.
இவ்விடயம் தொடர்பில் பாராளுமன்றத் தெரிவுக்குழு கவனம் செலுத்தியது. இதற்கமைவாக திறைசேரி மற்றும் போக்குவரத்து அமைச்சு பேச்சுவார்த்தை நடத்தி பொதுமக்களுக்கு நிவாரணத்துடன் கூடிய வேலைத்திட்டத்தை நடைமுடைப்படுத்த ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக செயலாளர் தெரிவித்தார்.
இதேவேளை வாகன புகை தொடர்பான சான்றிதழை வழங்கும் போது நிலவும் பிரச்சினைகள் மற்றும் எதிர்கால நடவடிக்கைகள் தொடர்பில் இதன் போது கவனம் செலுத்தப்படுமென்றும் போக்குவரத்து அமைச்சின் செயலாளர் எல்.பி.ஜயம்பதி மேலும் தெரிவித்துள்ளார்.