பூஜித் ஜயசுந்தர மற்றும் ஹேமசிறி பெர்னாண்டோவுக்கு பிணை
Related Articles
விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்ணான்டோ மற்றும் கட்டாய ஓய்விலுள்ள பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர ஆகியோருக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது. சந்தேகநபர்களை தலா 5 இலட்சம் ரூபா பெறுமதியான சரீரப்பிணையில் விடுவிக்க கொழும்பு பிரதான நீதவான் லங்கா ஜயரத்ன அனுமதி வழங்கினார்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பில் பிரதான சந்தேகநபர்களாக குறித்த இருவரும் பெயரிடப்பட்டுள்ளனர். அதற்கமைய கடந்த 2ம் திகதி இவர்கள் கைதுசெய்யப்பட்ட நிலையில் 3ம் திகதி முதல் இன்றையதினம் வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தனர்.
இதேவேளை குறித்த இருவருக்கும் எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள அடிப்படை உரிமை மீறல் மனுவை விசாரணை செய்ய பூரண நீதிபதிகள் குழாமும் நியமிக்கப்பட்டுள்ளது. நேற்று நியமிக்கப்பட்ட குறித்த நீதிபதிகள் குழாமில் உயர்நீதிமன்ற நீதிபதிகள் 7 பேர் உள்ளடங்குகின்றனர். இதனிடையே கட்டாய விடுமுறையிலுள்ள பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர மற்றும் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்ணான்டோ ஆகியோருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட அனைத்து மனுக்களும் எதிர்வரும் வெள்ளிக்கிழமை பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.