பிரான்சில் நடைபெற்று வரும் மகளிர் உலகக் கிண்ண கால்பந்து போட்டி இறுதிக்கட்டத்தை அடைந்துள்ளது. நேற்று முன்தினம் நடைபெற்ற அரையிறுதி போட்டியில் அமெரிக்கா, இங்கிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்தின. லயானில் நடைபெற்ற இந்த போட்டியில் அமெரிக்க அணி 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.
பின்னர் நேற்று நடைபெற்ற மற்றொரு அரையிறுதி ஆட்டத்தில் நெதர்லாந்து, சுவீடன் அணிகள் மோதின. ஆரம்பத்தில் சுவீடன் அணி முன்னேறியது. அவர்களுக்கு கோல் வாய்ப்புகளும் கிடைத்தன. ஆனால், நெதர்லாந்தின் தடுப்பாட்டம் சிறப்பாக இருந்ததால் கோல் அடிக்க முடியவில்லை. அதேவேளை நெதர்லாந்து அணியையும் கோல் அடிக்க விடாமல் சுவீடன் வீராங்கனைகள் அபாரமாக தடுத்தனர்.
இதனால் போட்டி நேரம் முடியும் வரை இரண்டு அணிகளும் கோல் எதுவும் போடவில்லை. எனவே கூடுதல் நேரம் கொடுக்கப்பட்டது. அப்போது சுவீடன் அணி வீராங்கனைகள் சற்று சோர்வுடன் காணப்பட்டனர். இந்த வாய்ப்பை பயன்படுத்திய நெதர்லாந்து அணி தனது முதல் கோலை பதிவு செய்தது. அந்த அணியின் ஜொக்கி குரோனன் 99-வது நிமிடத்தில் வெற்றிக்கான கோலை அடித்து அசத்தினார்.
அதன்பின்னர் இரு அணிகளும் கோல் எதனையும் போடவில்லை. இறுதியில் நெதர்லாந்து அணி, 1-0 என்ற கோல்கணக்கில் வெற்றி பெற்று முதல் முறையாக உலகக் கோபபை இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.
எதிர்வரும் 7ம் திகதி நடைபெறவுள்ள இறுதிப்போட்டியில் அமெரிக்காவுடன் நெதர்லாந்து அணி மோத உள்ளது.
