உலகக்கிண்ணத்தின் தீர்மானம் மிக்க போட்டியில் இன்று இந்தியாவை எதிர்கொள்கிறது பங்களாதேஷ்
Related Articles
உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரின் தீர்மானம் மிக்க போட்டியொன்று இன்று பேர்மிங்ஹேமில் நடைபெறவுள்ளது. இந்திய மற்றும் பங்களாதேஷ் அணிகள் போட்டியில் மோதவுள்ளன. இன்றைய போட்டியில் வெற்றிபெற்றால் இந்திய அணி அரையிறுதி சுற்றுக்கு தகுதிபெறும். தோல்வியடையும் பட்சத்தில் இலங்கை அணிக்கெதிரான போட்டியில் வெற்றிபெற வேண்டிய கட்டாயத்திற்கு இந்தியா உள்ளாகும்.
இன்னும் இரண்டு போட்டிகள் எஞ்சியிருக்கும் நிலையில் இரண்டிலும் அதிக ஓட்ட வித்தியாசத்தில் வெற்றிபெற்றாலோ, அரையிறுதிக்கு தகுதிபெற முடியுமென்ற நிலையில் பங்களாதேஷ் இன்று இந்தியாவை எதிர்கொள்கிறது. இன்றைய இந்தியாவுடனான போட்டியிலும் எதிர்வரும் 5ம் திகதி பாகிஸ்தானுடனான போட்டியிலும் பங்களாதேஷ் வெற்றிபெற்றாலும் ஏனைய அணிகளின் வெற்றி, தோல்வியின் அடிப்படையிலேயே அரையிறுதிக்கு தெரிவாக முடியும். இதனால் இன்றைய போட்டி இந்தியா மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு மிக முக்கியத்துவம் வாய்ந்த போட்டியாக அமையவுள்ளது.
உலகக்கிண்ண தொடரில் நேற்று நடைபெற்ற போட்டியில் இலங்கை அணி மேற்கிந்திய தீவுகளை 23 ஓட்டங்களால் வீழ்த்தியது. முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி அவிஸ்க பெர்ணான்டோவின் கன்னி சதத்தின் உதவியுடன் மேற்கிந்திய தீவுகள் அணிக்கு 339 ஓட்டங்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது.
எனினும் மேற்கிந்திய தீவுகள் அணி 50 ஓவர்களில் 9 விக்கெட்டுக்களை இழந்து 315 ஓட்டங்களை மாத்திரம் பெற்று தோல்வியடைந்தது. நிக்கலொஸ் பூரன் 118 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார். லசித் மாலிங்க 3 விக்கெட்டுக்களை வீழ்த்தினார். அவிஸ்க பெர்ணான்டோ ஆட்டநாயகனாக தெரிவானார். இப்போட்டியில் இலங்கை அணி வெற்றிபெற்ற போதிலும் ஏற்கனவே அரையிறுதிக்கான வாய்ப்பை இழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.