அத்தியாவசிய சேவையாக மாற்றப்பட்டுள்ள நிலையில் புகையிரத வேலைநிறுத்தத்திற்கு எதிராக பொலிசில் முறைப்பாடு

ITN News Editor
By ITN News Editor ஜூன் 28, 2019 13:06

அத்தியாவசிய சேவையாக மாற்றப்பட்டுள்ள நிலையில் புகையிரத வேலைநிறுத்தத்திற்கு எதிராக பொலிசில் முறைப்பாடு

புகையிரத சேவையை அத்தியாவசிய சேவையாக கொண்டுவரப்பட்டுள்ள நிலையில் பணி பகிஷ்கரிப்பை அமுல்படுத்தி பயணிகளை சிரமத்திற்குட்படுத்தியமை தொடர்பாக புகையிரத திணைக்களத்தின் பொது முகாமையாளர் டிலாந்த பெர்ணான்டோ கோட்டை பொலிசில் முறைப்பாடு செய்துள்ளார்.

புகையிரத தொழிற்சங்கம் ஒன்று பணி பகிஷ்கரிப்பில் ஈடுபட போவதாக விடுத்த அறிவுறுத்தலுக்கு அமைய பொது மக்களுக்கு ஏற்படுகின்ற சிரமங்களை தடுப்பதற்கு புகையிரதம் அத்தியாவசிய சேவையாக கொண்டுவரப்பட்ட வர்த்தமானி அறிவித்தலுக்கு அமைய இம்முறைப்பாடு செய்யப்பட்டதாக புகையிரத பொது முகாமையாளர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை புகையிரத பணி பகிஷ்கரிப்பு அமுல்படுத்தப்படும் வரை போதிய அளவு பஸ் வண்டிகளை நாடு பூராகவும் சேவையில் ஈடுபடுத்த போவதாக இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்க தலைவர் கெமுனு விஜயரட்ன தெரிவித்துள்ளார்.

புகையிரத சாரதிகள் உதவியாளர்கள் நிலைய பொறுப்பாளர்கள் மற்றும் கட்டுப்பாட்டாளர்கள் ஆரம்பித்த பணி பகிஷ்கரிப்பு காரணமாக அனுராதபுரம் புகையிரத நிலையம் ஊடாக பயணிக்கின்ற வடக்கிற்கான பிரதான புகையிரத வீதியில் எவ்வித புகையிரதமும் இன்று சேவையில் ஈடுபடவில்லை. கொழும்பு புறக்கோட்டையில் இருந்து வவுனியா நோக்கி நேற்று மாலை புறப்பட்ட கடுகதி புகையிரதமும் அனுராதபுரம் புகையிரத நிலையத்தில் நிறுத்தப்பட்டு பயணிகள் ரஜரட்ட ரெஜின புகையிரதத்தின் மூலம் அனுப்புவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தது. இதனால் கடமைக்கு சென்று வீடு திரும்பிய பயணிகள் பெரும் சிரமங்களுக்குட்பட்டனர்.

பணி பகிஸ்கரிப்பு காரணமாக மட்டக்களப்பில் இருந்து கொழும்பு நோக்கிய புகையிரத சேவைகளுக்கு தடை ஏற்பட்டது. இம்மாவட்டத்தில் சகல புகையிரத நிலையங்களிலும் இருந்தும் தூர சேவை மற்றும் குறுகிய சேவைகளுக்கான புகையிரதங்கள் சேவையில் ஈடுபடாமையினால் பயணிகள் சிரமத்திற்குட்பட்டமையை அவதானிக்க முடிந்தது.

எவ்வாறாயினும் புகையிரத பணி பகிஸ்கரிப்பு காரணமாக ஹட்டன் கொழும்பு அஞ்சல் சேவைக்கு எவ்வித தடையும் ஏற்படவில்லை. புறக்கோட்டையில் இருந்து ஹட்டன் அஞ்சல் அலுவலகம் வரை தபால் திணைக்களத்தின் வண்டிகளில் கடிதங்களையும் பொதிகளையும் விநியோகிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்ததாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

ITN News Editor
By ITN News Editor ஜூன் 28, 2019 13:06

Default