இலங்கை வாழ் முஸ்லீம் மக்கள் இன்று ரமழான் பண்டிகையை கொண்டாடுகின்றனர்

ITN News Editor
By ITN News Editor ஜூன் 5, 2019 09:55

இலங்கை வாழ் முஸ்லீம் மக்கள் இன்று ரமழான் பண்டிகையை கொண்டாடுகின்றனர்

இலங்கை வாழ் முஸ்லிம் மக்கள் இன்று ரமழான் பண்டிகையை கொண்டாடுகின்றனர். கடந்த ஒருமாத காலமாக நோன்பு நோற்ற முஸ்லிம் மக்கள் நேற்றையதினம் தலைபிறை தென்பட்டதையடுத்து இன்று ஈதுல் பிதுர் நோன்பு பெருநாளை கொண்டாடுகின்றனர்.

இந்த நிலையில் இஸ்லாமியர்களின் நோன்பு பெருநாளை முன்னிட்டு ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோர் தமது வாழ்த்துச்செய்திகளை அனுப்பியுள்ளனர்.

நோன்பு காலத்தில் இஸ்லாமியர்கள் லௌகீக இன்பங்களிலிருந்து விடுபட்டு சமய நிகழ்வுகளில் ஈடுபட்டு சமூகத்தில் வறியவர்களுக்கும் நலிவுற்றவர்களுக்கும் தமது உழைப்பின் மூலம் கிடைத்த செல்வத்தின் ஒரு பகுதியை வழங்குகின்றனர்.

அடுத்தவர்களின் பசியின் துயரத்தை அனுபவ பூர்வமாக உணர்ந்து அவர்களுக்கும் கொடுத்து வாழ்வதற்கு பழக்கும் ஒரு சமயத்தை பின்பற்றும் ஒரு சமூகம் உண்மையில் மனித குலத்திற்கு கிடைத்த கொடையாகுமெனவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன விடுத்துள்ள நோன்பு பெருநாள் வாழ்த்து செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை பிரதமர் ரணில் விக்ரமசிங்க தனது வாழ்த்துச்செய்தியில் பேராசை, இச்சை, சுயநலம் போன்ற துர்குணங்களை கட்டுப்படுத்தி மனிதாபிமானம், தியாகம் போன்ற நற்பண்புகளை மேலோங்க செய்வதற்கு இஸ்லாமியர்களின் நோன்புக்காலம் வழிவகுப்பதாக குறிப்பிட்டுள்ளார். இஸ்லாத்தின் உண்மையான மையக்கருத்திற்கு மாசு கற்பிக்கும் உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதல் போன்ற அடிப்படைவாதிகளின் செயற்பாடுகள் குறித்து அவதானமாக இருக்குமாறு உண்மையான முஸ்லிம்களிடம் தான் வேண்டிக்கொள்வதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். நோன்பு பெருநாள் தியாகம் மற்றும் சமத்துவத்தின் மேன்மை பொருந்திய செய்தியை உலகுக்கு எடுத்தியம்பும் மிக முக்கிய சமய பண்டிகை என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தனது நோன்பு பெருநாள் வாழ்த்துச்செய்தியில் தெரிவித்துள்ளார்.

இன்றையதினம் புனித ரமழான் நோன்பு பெருநாளை கொண்டாடும் எமது இஸ்லாமிய சொந்தங்கள் அனைவரது வாழ்விலும் நிம்மதி, சுபிட்சம், இறையருள் கிடைக்க சுயாதீன ஊடக வலையமைப்பு  நோன்பு பெருநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறது.

இதேவே இலங்கை வாழ் முஸ்லிம்கள் இன்று மகிழ்ச்சியுடன் தமது ரமழான் நோன்பு பெருநாளை கொண்டாடி வருவதாக எமது பிராந்திய செய்தியாளர்கள் தெரிவித்தனர்.

கிழக்கு மாகாணம் உட்பட நாட்டின் சகல பகுதிகளிலும் மக்கள் மிகவும் மகிழ்ச்சியாக தமது நோன்பு பெருநாள் கொண்டாட்டங்களில் ஈடுபட்டுவருவதாக எமது செய்தியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

இதேவேளை மலையகத்தின் ஹட்டன், நுவரெலியா, கண்டி உள்ளிட்ட பகுதிகளிலும் ரமழான் பண்டிகை முன்னிட்டு பள்ளிவாசல்களில் விசேட தொழுகைகள் இடம்பெற்றன. நாட்டின் சமாதானம் மற்றும் சுபிட்சம் வேண்டி விசேட பிரார்த்தனைகள் இடம்பெற்றதாக எமது மலையக செய்தியாளர்கள் தெரிவித்தனர்.

ITN News Editor
By ITN News Editor ஜூன் 5, 2019 09:55

Default