தலிபான் பயங்கரவாதிகளுக்கும் ஆப்கானிஸ்தான் அரச பிரதிநிதிகளுக்கும் இடையில் பேச்சுவார்த்தை
Related Articles
தலிபான் பயங்கரவாதிகளுக்கும், ஆப்கானிஸ்தான் அரச பிரதிநிதிகளுக்கும் இடையில் ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் பேச்சுவார்த்தையொன்று இடம்பெற்றுள்ளது. ஆப்கானிஸ்தான் ஆட்சியிலிருந்த தலிபான்கள் கடந்த 2001 ம் ஆண்டு அமெரிக்கா தலைமையிலான கூட்டுப்படைகளால் அகற்றப்பட்டனர்.
இதனையடுத்து கடந்த 18 ஆண்டுகளாக இரு தரப்பினருக்கும் இடையே மோதல் இடம்பெற்று வருகிறது. இதில் அரசுக்கு ஆதரவாக அமெரிக்க மற்றும் நேட்டோபடைகள் போரிட்டு வருகின்றன. தாக்குதல்களினால் பொதுமக்கள் மற்றும் இராணுவத்தினர் ஆயிரக்கணக்கில் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில் இரு தரப்பிற்கும் இடையில் சமாதானத்தை ஏற்படுத்தும் நோக்கில் அமெரிக்காவுக்கும் தலிபான் அமைப்புகளுக்கும் இடையே பல சுற்றுப் பேச்சுவார்த்தைகள் இடம்பெற்று வருகின்றன. இந்நிலையிலேயே ஆப்கானிஸ்தான் அரச தரப்பினருக்கும் தலிபான்களுக்கும் இடையிலான பேச்சுவார்த்தை ரஷ்யாவில் இடம்பெற்றுள்ளது. இதன்போது ஆப்கானிஸ்தானிலிருந்து வெளிநாட்டுப் படைகள் வெளியேற வேண்டுமென தலிபான்கள் கோரிக்கை முன்வைத்ததாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. எனினும் பேச்சுவார்த்தையின் இறுதியில் எவ்வித தீர்மானமும் மேற்கொள்ளப்படவில்லையென சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.