இந்திய பொதுத்தேர்தல் முடிவுகள் இன்று வெளியாகவுள்ளன. 7 கட்டங்களாக இடம்பெற்ற தேர்தலில் வாக்களிப்பதற்கு 900 மில்லியன் மக்கள் தகுதிபெற்றிருந்தனர். குறித்த தேர்தலானது பிரதமர் நரேந்த்ர மோதியின் ஆட்சி தொடர்பிலான மக்களின் நிலைப்பாட்டை அறியும் ஒன்றென அரசியல் விமர்சகர்கள் தெரிவித்துள்ளனர்.
543 ஆசனங்களுக்காக 8 ஆயிரத்திற்கும் அதிகமான வேட்பாளர்கள் தேர்தலில் போட்டியிட்டனர். 670 கட்சிகள் தேர்தலில் போட்டியிட்டன. இந்நிலையில் ஆட்சியை கைப்பற்றுவதற்கு 272 ஆசனங்களை அரசியல் கட்சியொன்று வெற்றிகொள்வது அவசியமாகும்.
இறுதியாக கடந்த 2014ம் ஆண்டு இடம்பெற்ற இந்திய பொதுத்தேர்தலில் ஆளும்கட்சியான பாரதீய ஜனதா கட்சி 282 ஆசனங்களை பெற்று வெற்றிபெற்றது. எதிர்க்கட்சியான காங்கிரஸ் 44 ஆசனங்கள் மாத்திரமே பெற்றுக்கொண்டது.
இதேவேளை இம்முறை தேர்தல் பிரச்சாரத்தின் போது பிரதான கட்சிகள் மக்களுக்கு பல்வேறு வாக்குறுதிகளை வழங்கியிருந்தன. வேலைவாய்ப்புகளை அதிகரித்தல், பொருளாதார அபிவிருத்தியை இருமடங்காக அதிகரித்தல், பெண் ஊழியர்களை பலப்படுத்தல், விவசாயிகளின் வருமானத்தை அதிகரித்தல், உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தல் என்பன குறித்த வாக்குறுதிகளில் உள்ளடங்குகின்றன.