fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

உயிர்தத ஞாயிறு தாக்குதலின் 31வது நாள் நினைவையொட்டி நாடெங்கும் விசேட பிரார்த்தனைகள்

ITN News Editor
By ITN News Editor மே 21, 2019 12:45

உயிர்தத ஞாயிறு தாக்குதலின் 31வது நாள் நினைவையொட்டி நாடெங்கும் விசேட பிரார்த்தனைகள்

உயிர்த்த ஞாயிறு தினமன்று மேற்கொள்ளப்பட்ட பயங்கரவாத தாக்குதலுக்கு ஒரு மாதம் பூர்தியாகும் நிலையில் அந்த மிலேச்சதனமான தாக்குதலினால் உயிர் இழந்தோரை நினைவுகூர்ந்தும் மற்றும் காயமடைந்தோர் விரைவில் சுகம் பெற வேண்டுமென்றும் பிரார்த்தித்து ஆசிர்வாத பூஜைகள் நடைபெற்றன.

சர்வமத தலைவர்களின் பங்கேற்புடன் கல்கிசை தர்மபாலாராம விஹாரையில் பின்கம நிகழ்வொன்று நடைபெற்றது. அமரபுர பீடத்தின் மகாநாயக்கர் அதி சங்கைமக்குரிய கொட்டுகொட தம்மாவாச தேரர், கல்கிசை புனித அந்தோனியார் பங்கு தந்தை, ராஜ் சில்வா அடிகளார், தெஹிவளை ஸ்ரீ விஷ்னு கோவில் பிரதம குரு ராமகிருஷ்ண குருக்கள் உள்ளிட்ட சமய தலைவர்கள் இந்நிகழ்வின் போது இணைந்திருந்தனர். பயங்கரவாத தாக்குதலினால் உயிரிழந்தோர் நினைவுகூரப்பட்டதுடன், காயமடைந்தோர் விரைவில் சுகம் பெற வேண்டுமென பிரார்த்தித்து போதி பூஜை மற்றும் விளக்கு பூஜை என்பன இடம்பெற்றன.

இதேநேரம் பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்தோரை நினைவுகூர்ந்து விசேட தேவ ஆராதனைகள் கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயத்தில் நடைபெற்றன. இன்று காலை 8.45 மணிக்கு தேவ ஆராதனைகள் ஆரம்பமானதுடன், ராஜ் பெர்ணான்டோ அடிகளார் தலைமையில் ஆராதனைகள் இடம்பெற்றன. பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்தோரின் உறவினர்களும் இதில் கலந்து கொண்டனர்.

மட்டக்களப்பு சியோன் தேவாலயத்தில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் உயிர்நீத்தவர்களை நினைவு கூரும் வகையில் 31வது நாள் நினைவேந்தல் நிகழ்வு மட்டக்களப்பு கல்லடி துளசி மண்டபத்தில் இடம்பெற்றது. கல்லடி பொது மக்களின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்நிகழ்வில் அரசியல் பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர். உயிர் நீத்தவர்களுக்கு இரண்டு நிமிட மௌன இறை வணக்கம் செலுத்தப்பட்டமையை தொடர்ந்து, ஈகைச்சுடர் ஏற்றப்பட்டு நினைவுகூரும் நிகழ்வு இடம்பெற்றது.

இதேநேரம் சியோன் தேவாலயத்தில் உயிர்நீத்த உறவுகளின் 31ம் நாள் நினைவேந்தலை முன்னிட்டு, காத்தான்குடி பொலிஸ் நிலையத்தில் சர்வமத அஞ்சலி செலுத்தும் நிகழ்வு நடைபெற்றது. பௌத்த, இந்து, இஸ்லாமிய, கத்தோலிக்க மத தலைவர்களினால் விசேட பிரார்த்தனைகளும் இடம்பெற்றன. உயிர் நீத்தவர்களின் உறவினர்களும் இதில் கலந்து கொண்டனர்.

வவுனியா வைரவர் புளியங்குளம் ஆதி விநாயாகர் தேவஸ்தானத்தில் ஆலய மணி ஒலிக்கப்பட்டு, விசேட ஆத்ம சாந்தி பிரார்த்தனை இடம்பெற்றதுடன், உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் காயமடைந்தவர்கள் குணமடைய வேண்டி, மௌன பிரார்த்னையும் இடம்பெற்றது.

இலங்கையில் நடைபெற்ற தாக்குதல்களின் 31ம் நாள் பூர்த்தியினை நினைவுகூரும் முகமாக 21ம் திகதி வட மாகாணத்தின் அனைத்து சமய வழிபாட்டு தளங்களிலும் மணி ஓசை ஒலிக்க செய்வதுடன், ஒரு நமிட மௌன அஞ்சலியையும் செலுத்துமாறு வட மாகாண ஆளுநர் சுரேன் ராகவன் விடுத்த கோரிக்கையின் படியே இந்நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

ITN News Editor
By ITN News Editor மே 21, 2019 12:45

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க