சிறைச்சாலை வரலாற்றில் கூடுதலான சிறை கைதிகள் ஜனாதிபதி பொது மன்னிப்பின் கீழ் நாளை விடுதலை செய்யப்படவுள்ளனர். இதன் எண்ணிக்கை 762 ஆகும். இவர்களுக்கு விடுதலை வழங்கும் நிகழ்வு ஜனாதிபதியின் தலைமையில் வெலிக்கடை சிறைச்சாலை மைதானத்தில் இடம்பெறவுள்ளதாக சட்டம் மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
பொது மன்னிப்பின் அடிப்படையில் கைதிகளை விடுதலை செய்யும் நிகழ்வு இதற்கு முன்னர் நாடு பூராகவும் உள்ள சிறைச்சாலைகளிலேயே இடம்பெற்றது. எனினும் இம்முறை சகல சிறை கைதிகளும் ஒரே இடத்தில் வைத்து விடுதலை செயயப்படுவது விசேட அம்சமாகும். அரசியல் அமைப்பின் 34வது சரத்தின் கீழ் ஜனாதிபதி பொது மன்னிப்பு வழங்கப்படவுள்ளது. விடுதலை செய்யப்படவுள்ள 762 சிறைகைதிகளில் 26 பேர் பெண்கள் ஆவர். விடுதலை செய்யப்படவுள்ள சிறை கைதிகளில் கூடுதலானோர் வெலிகடை சிறைச்சாலையில் உள்ளவர்கள் ஆவர். இதன் எண்ணிக்கை 117 ஆகும்.
பாலியல் வன்புனர்வு, சிறுவர் துஷ்பிரயோகம் போதை பொருள் போன்ற குற்றங்களுக்காக தண்டனை அனுபவித்து வரும் சிறை கைதிகளை தவிர, ஏனைய சிறு குற்றங்கள்; தொடர்பாக சிறைப்பிடிக்கப்பட்டவர்களில் இவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
இதேவேளை வெசாக் நிகழ்வுக்கு இணைவாக சிறை கைதிகளை பார்வையிடுவதற்கு உறவினர்களுக்கு நாளைய தினம் சந்தர்ப்பம் கிடைக்கமாட்டாது. இதற்கு பதிலாக ஞாயிறு மற்றும் திங்கள் ஆகிய நாட்களில் இதற்கான சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் தலைமையகம் அறிவித்துள்ளது. இம்முறை வெசாக் பௌர்ணமி தினத்தையொட்டி சிறை கைதிகளுக்கு என விசேட நிகழ்ச்சிகள் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளமை இதற்கு காரணமாகும்.