மட்டக்களப்பு வவுணதீவு பகுதியில் இரு பொலிஸ் அதிகாரிகள் கொல்ப்பட்ட சம்பவத்துடன் தொடர்புபட்டதாக சந்தேகத்தின்பேரில் கைதுசெய்யப்பட்ட முன்னாள் போராளியை விடுவிக்குமாறு ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளார். தனது கோரிக்கையின் பேரில் பொலிஸ் மா அதிபருக்கும், சட்டமா அதிபருக்கும் ஜனாதிபதி குறித்த உத்தரவை பிறப்பித்துள்ளதாக அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்தார்.
கடந்த நவம்பர் மாதம் இடம்பெற்ற இத்தாக்குதலை முன்னாள் எல்ரீரீஈ உறுப்பினர் ஒருவரே மேற்கொண்டதாக தெரிவித்து கைதுசெய்யப்பட்டார். எனினும் அண்மையில் ஈஸ்டர் தின தாக்குதல்கள் தொடர்பில் கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர்கள் வழங்கிய தகவல்களுக்கு அமைய தேசிய தௌஹீத் ஜமாத் அமைப்பை சேர்ந்த சஹ்ரான் மொஹமட் என்பவரே இத்தாக்குதலையும் மேற்கொண்டுள்ளதாக தெரியவந்தது.
இந்நிலையிலேயே ஏற்கனவே கைதுசெய்யப்பட்ட முன்னாள் எல்ரீரீஈ உறுப்பினரை விடுவிக்க ஜனாதிபதி இன்று காலை தன்னிடம் இணக்கம் வெளியிட்டதாக அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.