உயிர்த்த ஞாயிறன்று இடம்பெற்ற குண்டுவெடிப்பு சம்பவங்கள் தொடர்பில் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ மற்றும் கட்டாய விடுமுறையிலுள்ள பொலிஸ் அதிபர் பூஜித் ஜயசுந்தர ஆகியோரிடம் வாக்குமூலங்கள் பெறப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
மேலும் சிலரிடம் வாக்குமூலங்கள் பதிவுசெய்யப்படவுள்ள நிலையில் இதுதொடர்பில் தங்கள் கருத்துக்கள் மற்றும் ஆலோசனைகளை முன்வைக்குமாறு பொதுமக்களுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. எழுத்து மூலமாகவோ, தொலைநகல் ஊடாகவோ பொதுமக்கள் இதுதொடர்பான தமது கருத்துக்களை தெரிவிக்க முடியுமென அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து எழுத்துமூலம் தகவல் வழங்குவோர் ஜனாதிபதி விசேட விசாரணை செயலகம், தபால்பெட்டி இலக்கம் 2306, கொழும்பு 1 என்ற முகவரிக்கும், தொலைநகல் மூலம் தகவல் வழங்குவோர் 0112 100 446 என்ற இலக்கத்தினூடாகவும் தமது கருத்துக்களை தெரிவிக்கமுடியும்.
இதேவேளை கடந்த 21ம் திகதி நாட்டில் இடம்பெற்ற குண்டுவெடிப்பு சம்பவங்கள் தொடர்பில் ஆராய்ந்து இருவாரங்களுக்குள் அறிக்கை சமர்ப்பிக்குமாறு விசாரணைக்குழுவிற்கு ஜனாதிபதி ஆலோசனை வழங்கியுள்ளார்.