உயிர்த்த ஞாயிறன்று மேற்கொள்ளப்பட்ட பயங்கரவாத தாக்குதலுடன் தொடர்புடைய சஹ்ரான் ஹாசிமின் சகா ஒருவர் இந்தியாவில் கேரள மாநிலத்தில் கைதுசெய்யப்பட்டார். இந்திய தேசிய விசாரணை முகவர் நிலையம் இவரை கைதுசெய்துள்ளது.
இவர் ரியாஸ் அபூபக்கர் என அடையாளம் காணப்பட்டுள்ளார். இவர் கேரளா மாநிலத்தில் தாக்குதல் ஒன்றை நடத்தவும் திட்டமிட்டுள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளதாக தேசிய விசாரணை முகவர் நிலையம் தெரிவித்துள்ளது.
உயிர்த்த ஞாயிறன்று ஆலயங்கள் உட்பட பல இடங்கள் மீது குண்டுத்தாக்குதல்களை நடத்திய தௌஹீத் ஜமாத் அமைப்பின் சஹ்ரான ஹாசிமின் சகாவாக தான் செயற்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.
29 வயதுடைய சந்தேக நபர் அந்நாட்டின் கொச்சின் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார். இவர் அபூது ஜானா எனும் பெயரிலும் தன்னைய அடையாளப்படுத்தியுள்ளார். ரியாஸ் அபூபக்கர் எனும் சந்தேக நபரான இவர் தௌஹீத் ஜமாத் அமைப்பின் சஹ்ரான் ஹாசிமினதும் ஐ.எஸ். உறுப்பினரான சாக்கிர் நாயக்கினதும் சொற்பொழிவுகளையும் ஒளி நாடாக்களையும் கடந்த ஒருவருட காலமாக செவிமடுத்துள்ளதாகவும் இந்திய தேசிய புலனாய்வு முகவர் நிலையம் தெரிவித்துள்ளது.