fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

புலமைப்பரிசில் பரீட்சையை ரத்து செய்வது குறித்து ஜனாதிபதி மீண்டும் விளக்கம்

ITN News Editor
By ITN News Editor ஏப்ரல் 2, 2019 15:23

புலமைப்பரிசில் பரீட்சையை ரத்து செய்வது குறித்து ஜனாதிபதி மீண்டும் விளக்கம்

மாணவர்களுக்கு சிறந்த கல்வி முறையொன்றை அறிமுகப்படுத்தும் நோக்கிலேயே புலமைப்பரிசில் பரீட்சையை ரத்துசெய்ய தீர்மானித்ததாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். கொடகம சுபாரதி மஹாமான்ய வித்தியாலயத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனை தெரிவித்தார்.

கொடகம சுபாரதி மஹாமான்ய வித்தியாலயத்திற்கு சென்ற ஜனாதிபதி பாடசாலை மாணவர்களினால் வரவேற்கப்பட்டார். சிறந்தவை மாணவர்களுக்கே எண்ணக்கருவின் கீழ் மேல் மாகாண சபையின் நிதி ஒதுக்கீட்டின் மூலம் கொடகம சுபாரதி மஹாமன்ய வித்தியாலயத்தில் நிர்மாணிக்கப்பட்ட அரங்கு மற்றும் 3 மாடி கட்டிடம் ஜனாதிபதியினால் மாணவர்களின் பயன்பாட்டிற்கென திறந்து வைக்கப்பட்டன. ஜனாதிபதியின் வருகையை நினைவு கூறும் வகையில் மரமொன்றும் நாட்டி வைக்கப்பட்டது.

பின்னர் நினைவுப் பலகையை திரைநீக்கம் செய்து வைத்து அரங்குடன் கூடிய கட்டிட தொகுதி திறந்து வைக்கப்பட்டதையடுத்து ஜனாதிபதி அதனை பார்வையிட்டார். பாடசாலையில் திறமைகளை வெளிக்காட்டிய மாணவர்களுக்கு ஜனாதிபதியினால் சின்னங்களும் வழங்கி வைக்கப்பட்டன. மாணவி ஒருவரினால் வரையப்பட்ட ஜனாதிபதியின் உருவப்படம் அடங்கிய சித்திரம் ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டது. கூடியிருந்தோர் மத்தியில் உரையாற்றிய ஜனாதிபதி 5 ம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சைக்கு பதிலாக 7 ம் தரத்திலோ அல்லது 8 ம் தரத்திலோ பரீட்சையொன்றை நடாத்தி அதன் பெறுபேறுகளுக்கு அமைய மாணவர்களின் திறமைகளை இனங்கண்டு சம்பந்தப்பட்ட துறைகளில் மாணவர்களை ஈடுபடுத்தும் வேலைத்திட்டமொன்றை அமுல்படுத்தப்போவதாக தெரிவித்தார்.

கல்வி துறைசார்ந்த நிபுணர்களின் வழிகாட்டலில் இதனை தயாரிக்கப்போவதாகவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார். வைத்தியர்கள், பொறியியலாளர்கள், கணிதவியல் நிபுணர்கள், விவசாய நிபுணர்கள், தொழிநுட்ப நிபுணர்கள் போன்ற துறைகள் வரை மாணவர்களுக்கு உயர்கல்வியை கற்பதற்கான சந்தர்ப்பம் இதன் மூலம் ஏற்படுகின்றது.

ஜனாதிபதி கருத்து தெரிவிக்கும் போது :

“நான் கூறும் கருத்து குறித்து பெற்றோர்கள் மத்தியில் கருத்து முரண்பாடுகள் ஏற்படலாம். எனது கருத்தை சில பெற்றோர்கள் ஏற்றுக்கொள்வார்கள். சிலர் எதிர்ப்பார்கள். புலமைப்பரிசில் பரீட்சை ஆரம்பிக்கப்பட்டது. கல்வியை பெற்றுக்கொள்ள முடியாத பொருளாதார நிலையிலுள்ள குடும்பங்களின் பிள்ளைகளுக்கு அரசாங்கத்தினால் பாடசாலையொன்றை வழங்கி அதற்குரிய செலவீனத்தை ஏற்று மாதமொன்றுக்கு குறிப்பிட்ட கொடுப்பனவொன்றை வழங்கி அம்மாணவனை கல்வித்துறையில் பலப்படுத்தும் நோக்கிலேயே ஆகும். ஆனால் தற்போது அவ்வாறு இடம்பெறுவதில்லை. பிரபல பாடசாலையென கூறிக்கொள்ளும் பாடசாலையொன்றுக்கு அனுமதியை பெற்றுக்கொள்வதற்கான சந்தர்ப்பமாகவே இதனை பயன்படுத்துகின்றனர். இதற்காக பெரும் முயற்சி செய்கின்றனர். புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்து உயர்தரம் வரை கற்று பல்கலைக்கழங்களுக்கு 13 அல்லது 14 சதவீதத்தினரே செல்கின்றனர். இப்பரீட்சையில் சித்தியடைந்து பிரபல பாடசாலைகள் எனக்கூறிக்கொள்ளும் பாடசாலைகளுக்கு செல்வோரில் 86 சதவீதத்தினர் பல்கலைக்கழக அனுமதியை பெறுவதில்லை. பல்கலைக்கழகங்களுக்கான அனுமதி பெறுவோரில் 86 சதவீதத்தினர் புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடையாதவர்கள். இக் கல்வி முறையில் பாரிய மாற்றங்கள் ஏற்படுத்தப்பட வேண்டும்.” என தெரிவித்தார் 

ITN News Editor
By ITN News Editor ஏப்ரல் 2, 2019 15:23

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க