வடகொரியா மீண்டும் ஏவுகணை மத்திய நிலையம் ஒன்றை புனரமைத்து வருவதற்கு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். சோ செய்மதி விண்வெளி மையத்தினை அழிப்பதாக வடகொரியா உறுதியளித்திருந்தது. ஆனால் அது மீண்டும் நிர்மாணிக்கப்பட்டு வருவதை செய்மதி தொழில்நுட்பம் மூலம் பெறப்பட்ட காணொளிகள் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பிற்கும் வடகொரிய தலைவர் கிம் ஜொன் உன்னுக்கும் இடையில் கடந்த வருடம் இடம்பெற்ற முதலாவது சந்திப்பில் இதற்கான இணக்கம் காணப்பட்டது. கொரிய தீபகற்பம் அணுவாயுதங்கள் அற்ற வலயமாக மாற்றப்படுமென வடகொரியா இணக்கம் தெரிவித்திருந்தது. இதேவேளை அண்மையில் வியட்நாமில் இடம்பெற்ற இருநாட்டு தலைவர்களுக்கு இடையில் இடம்பெற்ற சந்திப்பு எவ்வித இணக்கப்பாடும் இன்றி தோல்வியில் முடிந்தது. இந்த சூழலில் இருநாடுகளுக்கும் இடையிலான உறவுகள் பாதிக்கப்படலாம் என அரசியல் விமர்சகர்கள் தெரிவித்துள்ளனர்.