இலங்கை கிரிக்கட்டின் பிரதம பயிற்றுவிப்பாளரான சந்திக் ஹத்துருசிங்கவுக்கு வழங்கப்பட்டிருந்த தெரிவுகுழு உறுப்புரிமையை இரத்து செய்வதற்கு விளையாட்டுத்துறை அமைச்சர் ஹரீன் பெர்னாண்டோ நடவடிக்கை எடுத்துள்ளார். இலங்கை கிரிக்கட் அணியின் பிரதம பயிற்றுவிப்பாளராக சந்திக்க ஹத்துருசிங்க 2017 ம் ஆண்டு டிசம்பர் 20 ம் திகதி முதல் செயற்பட்டு வருகிறார். இவரது தலைமையின் கீழ் இலங்கை அணி 13 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளதுடன் இவற்றில் 4 பேட்டிகளில் வெற்றிபெற்றுள்ளது. 6 போட்டிகள் தோல்வி அடைந்தும். 3 போட்டிகள் வெற்றி தோல்யின்றி நிறைவடைந்துள்ளன. 21 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 14 போட்டிகளில் தோல்வி அடைந்துள்ளது. ஒன்பது 20 – 20 போட்டிகளில் விளையாடி இவற்றில் 5 போட்டிகளில் தோல்வியை சந்தித்துள்ளது.
எவ்வாறாயினும் இலங்கை கிரிக்கட்டின் பிரதம பயிற்றுவிப்பாளரான சந்திக்க ஹதுருசிங்கவுக்கு மாதந்தோறும் 75 இலட்சம் ரூபா நிதியும் பல்வேறு சலுகைகளும் வழங்கப்படுகின்றன. இலங்கை கிரிக்கட் அணியின் பிரதம பயிற்றுவிப்பாளரான இவர் இதுவரை காலமும் தெரிவுக்குழு உறுப்பினராகவும் செயற்பட்டுள்ளார். போட்டி சுற்றுகளுக்கான அணி இவரது விருப்பத்தின் பெயரிலேயே தேர்ந்தெடுக்கப்படுகின்றது. கிரிக்கட் தெரிவுக்குழுவிற்கு இருந்த தேர்ந்தெடுக்கும் அதிகாரம் இதன்மூலம் இரத்து செய்யப்படுகின்றது. எவ்வாறாயினும் அசந்த டி மெல் தலைமையிலான இலங்கை கிரிக்கட் தெரிவுக்குழுவுக்கும் விளையாட்டுத்துறை அமைச்சர் ஹரீன் பெர்னாண்டோவுக்கும் இடையிலான விசேட சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. இதன்போதே பிரதான பயிற்றுவிப்பாளரான ஹத்துருசிங்க தெரிவுக்கு செயற்பாடுகளிலிருந்து நீக்குவதற்கு தீர்மானிக்கப்பட்டது. அத்துடன் தெரிவுக்குழு உறுப்பினர்கள், அணி முகாமையாளர்கள் மற்றும் அணித்தலைவர் ஆகியோர் இணைந்து எதிர்காலத்தில் கிரிக்கட் அணியை தேர்ந்தெடுக்க வேண்டுமெனவும் இதன்பேது தீர்மானிக்கப்பட்டது. இதற்கமைய அவுஸ்திரேலியாவுடன் அடுத்த மாதம் 1 ம் திகதி ஆரம்பமாகவுள்ள 2 வது டெஸ்ட் போட்டியில் இலங்கை அணியில் மாற்றங்களை எதிர்பார்க்க முடியுமென தெரிவுக்குழு உறுப்பினர் ஒருவர் எமது நிலையத்திற்கு தெரிவித்துள்ளார்.