மன்னார் மனித புதைகுழி மாதிரிகளை பெற்றுக்கொள்ளும் நடவடிக்கை இன்று இடம்பெறவுள்ளது. மனித புதைகுழியிலிருந்து மீட்கப்பட்ட உடல்கள் எக்காலத்திற்குரியவை என கண்டறியும் நோக்கில் அவற்றின் மாதிரிகள் அமெரிக்காவுக்கு அனுப்பப்படவுள்ளன. மன்னார் நீதவானின் மேற்பார்வையின் கீழ் இதுதொடர்பான நடவடிக்கைகள் இடம்பெறுவதாக எமது செய்தியாளர் தெரிவித்தார். நீதிமன்ற வைத்தியத்துறை தொடர்பான விசேட வைத்தியர்கள் குழுவும் தொல்பொருளியல் தொடர்பான விசேட நிபுணத்துவர்கள் குழுவும், காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பான காரியாலயத்தின் பிரதிநிதிகளும், அரச பகுப்பாய்வு திணைக்கள அதிகாரிகள் உள்ளிட்டோரும் இதில் இணைந்துள்ளனர். மன்னார் மனித புதைகுழியிலிருந்து எடுக்கப்பட்ட 6 மனித உடல்களை காபன் பரிசோதனைக்கு அனுப்ப திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கென இரண்டு மாதிரிகள் நேற்றையதினம் எடுக்கப்பட்டன. ஏனைய மாதிரிகள் இன்று பெற்றுக்கொள்ளப்படவுள்ளதாக விசேட நிபுணத்துவர்கள் தெரிவித்துள்ளனர். மன்னார் சதொச வளாகத்தில் இடம்பெற்ற மீள்புனரமைப்பு நடவடிக்கையின் போது மனித எலும்புக்கூடுகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அதன் பின்னர் 119 நாட்களாக இதன் அகழ்வு பணிகள் தொடர்ந்தும் இடம்பெற்று வருகின்றன. இதுவரை மொத்தமாக 276 முழு மனித எலும்புக்கூடுகள் மீட்கப்பட்டு நீதிமன்றத்தில் பாதுகாப்பில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மன்னார் மனித புதைகுழி மாதிரிகளை பெற்றுக்கொள்ளும் நடவடிக்கை இன்று
படிக்க 1 நிமிடங்கள்