fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

இலங்கை ஜனநாயக சோஷலிச குடியரசின் பிரதமராக 5 ஆவது முறையாகவும் பதவியேற்றார் ரணில் விக்கிரமசிங்க

ITN News Editor
By ITN News Editor டிசம்பர் 16, 2018 13:36

இலங்கை ஜனநாயக சோஷலிச குடியரசின் பிரதமராக 5 ஆவது முறையாகவும் பதவியேற்றார் ரணில்  விக்கிரமசிங்க

ஐந்தாவது முறையாக இலங்கை ஜனநாயக சோஷலிச குடியரசின் பிரதம மந்திரியாக ஐக்கிய தேசியக்கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க இன்று மீண்டும் பதவியேற்றார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் ஜனாதிபதி காரியாலயத்தில் வைத்து இன்று முற்பகல் இது தொடர்பான நிகழ்வு இடம்பெற்றது. கடந்த ஒக்டோபர் 26 ம் திகதி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ரணில் விக்கிரமசிங்கவை பிரதமர் பதவிலிருந்து நீக்கி முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை பிரதமராக நியமித்தார்.

அதன்பின்னர் மேற்கொள்ளப்பட்ட பல்வேறு அரசியல் நகர்வுகள் காரணமாக நாட்டில் ஸ்த்திரமற்ற நிலை உருவானது. இந்நிலையிலேயே ஜனாதிபதி பாராளுமன்றத்தை கலைப்பதற்கு எடுத்த முயற்சி சட்டத்திற்கு புறம்பானதென உயர்நீதிமன்றம் அண்மையில் தீர்மானித்தது. பின்னர் மஹிந்த ராஜபக்ஷ பிரதமர் பதவியில் தொடர்வதற்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் இடைக்கால தடையுத்தரவொன்றை பிறப்பித்தது. இதற்கெதிராக உச்சநீதிமன்றில் மஹிந்த தரப்பினர் மனுத்தாக்கல் செய்தபோதிலும் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் இடைக்கால தடையுத்தரவு சரியானதென கடந்த வெள்ளிக்கிழமை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதனையடுத்து பதவிவிலகவுள்ளதாக அறிவித்த மஹிந்த ராஜபக்ஷ நேற்று தனது பதவியினை ராஜினாமா செய்தார் அதனையடுத்து இன்றைய தினம் ஐக்கிய தேசியக்கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க பதவி ஏற்பார் என அறிவிக்கப்பட்டது. அதற்கமைவாகவே ஜனாதிபதி முன்னிலையில் அவர் 5 வது முறையாக இலங்கை பிரதமராக பதவியேற்றார்.

கடந்த 1977 ம் ஆண்டு முதல் முறையாக கொழும்பு மாவட்டத்திலிருந்து பாராளுமன்றத்திற்கு தெரிவானார். அப்போதைய ஜனாதிபதி ஜே.ஆர் ஜயவர்த்தனவின் அமைச்சரவையில் இளைஞர் விவகாரம் மற்றும் தொழில் அமைச்சராக ரணில்விக்கிரமசிங்க செயற்பட்டார். அதன்பிறகு நீண்ட அரசியல் பயணத்தை மேற்கொண்ட ரணில் விக்கிரமசிங்க கடந்த 1993 ம் ஆண்டு முதல் 1994 ம் ஆண்டு வரை முதன்முதலாக இலங்கையின் பிரதமராக பதவி வகித்தார். பின்னர் 2001 ம் ஆண்டு முதல் 2004 ம் ஆண்டு வரை அவர் பிரதமராக செயற்பட்டார். அதன்பின்னர் கடந்த 2015 ம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் மைத்திரிபால சிறிசேன அவர்கள் வெற்றிபெற்றதன் பின்னர் 3 வது முறையாக பிரதமராக நியமிக்கப்பட்டார். அதனைத் தொடர்ந்து அதே ஆண்டில் நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசியக்கட்சி 106 ஆசனங்களை பெற்று வெற்றிபெற்றது. இதன்போது 4 வது முறையாக பதவி ஏற்ற ரணில் விக்கிரமசிங்க அவர்கள் கடந்த ஒக்டோபர் 26 ம் திகதி வரை இப்பதவியில் நீடித்தார். இந்நிலையிலேயே 5 வது முறையாக இன்று அவர் இலங்கை ஜனநாயக சோஷலிச குடியரசின் பிரதமராக பதவியேற்றமை குறிப்பிடத்தக்கது.

அவரது பதவியேற்பு நிகழ்வில் ஐக்கிய தேசிய முன்னணி பாராளுமன்ற உறுப்பினர்கள் பலர் கலந்துகொண்டிருந்தனர். இதேவேளை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்கு வாழ்த்து தெரிவிப்பதற்கு ஆதரவாளர்கள் பலரும் ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக கூடியிருந்ததாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

ITN News Editor
By ITN News Editor டிசம்பர் 16, 2018 13:36

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க

Thank you for taking time to Vote for us at BestWeb.lk 2020

logo