தென் கிழக்கு வங்காள விரிகுடாவில் ஏற்பட்டுள்ள ஆழமான தாழமுக்கம் அடுத்து வரும் 24 மணித்தியாலங்களுக்குள் சூறாவளியாக உருவாக கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. கடற்றொழிலில் ஈடுபடுவோர் இதுகுறித்து அவதானத்துடன் செயற்படுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.
இம்மாதம் 16 ம் திகதி வரை பொத்துவிலிருந்து மட்டக்களப்பு மற்றும் காங்கேசன்துறை வரை ஆழ்கடல் பகுதியில் கடற்தொழில் நடவடிக்கைகளில் ஈடுபடுவதிலிருந்து தவிர்ந்து கொள்ளுமாறு அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது. பொத்துவிலிருந்து திருகோணமலை ஊடாக காங்கேசன் துறைவரையான கடற்பகுதியில் ஆங்காங்கே மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடும் கிழக்கு ஆழ்கடல் பகுதிகளில் பலத்த மழை பெய்யக்கூடும் நாடு முழுவதும் அவ்வப்போது மணித்தியாலத்திற்கு 50 கிலோமீற்றர் வரையான வேகத்தில் ஓரளவு பலத்த காற்றுவீசக்கூடும். இச்சந்தர்ப்பத்தில் கடல் ஓரளவு கொந்தளிப்பாக காணப்படும். இடியுடன் கூடிய மழைபெய்யக்கூடிய சந்தர்ப்பங்களில் அப்பகுதிகளில் பலத்த காற்றும் வீசக்கூடும். கிழக்கு மாகாணத்திலும் பொலன்னறுவை மாவட்டத்திலும் ஆங்காங்கே மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடும். நாட்டின் ஏனைய பிரதேசங்களில் சீரான வானிலை நிலவும் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது. பலத்த காற்று வீசக்கூடிய சந்தர்ப்பங்களில் ஓரளவு குளிரான வானிலையும் எதிர்பார்க்கப்படுகின்றது.