சபாநாயகரின் நடவடிக்கைகள் குறித்து அமைச்சர்கள் சிலர் நேற்று ஊடகவியலாளர்கள் மத்தியில் குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ளனர்.
தற்போதைய சபாநாயகர் பாராளுமன்ற சம்பிரதாயங்களை சீர்குலைத்துள்ளதாக அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா குறிப்பிட்டார்.
சபாநாயகரின் மறைக்கப்பட்ட நிகழ்ச்சி நிரலுக்கு பங்குதாரராக தம்மால் முடியாது எனவும் சபாநாயகர் ஹன்சாட் அறிக்கையை மாற்றியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
பாராளுமன்ற அமர்வு சட்டவிரோதமானது என அமைச்சர் எஸ்.பி.திஸாநாயக்க தெரிவித்தார். முன்னர் இருந்த சபாநாயகர்களை முன்மாதிரியாகக் கொண்டு தற்போதைய சபாநாயகர் செயற்பட வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்தார்.
வெளிநாட்டுச் சக்திகளின் தேவைக்காக சபாநாயகர் நாட்டை ஸ்திரமற்ற நிலைக்கு இட்டுச் செல்ல நடவடிக்கை மேற்கொள்வதாக அமைச்சர் விமல் வீரவங்ச தெரிவித்துள்ளார். ரணில் விக்ரமசிங்கவை கட்சியின் ஆதரவாளர்களே நிராகரித்துள்ளனர். கடந்த அரசாங்கம் ஜனநாயகத்திற்கு எதிராக செயல்பட்டது. மக்களுக்கு எதிரான சட்டமூலங்களை கொண்டுவர அவர்கள் நடவடிக்கை மேற்கொண்டதாகவும் அமைச்சர் விமல் வீரவங்ச குறிப்பிட்டார்.
தற்போது தேசிய பொருளாதாரத்தைக் கட்டியெழுப்ப நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. சமுர்த்தி உத்தியோகத்தர்கள் நிரந்தரமாக்கப்பட்டுள்ளனர். நாட்டிற்கு தற்போது அவசியமானது பொதுத் தேர்தலே எனவும் விமல் வீரவங்ச குறிப்பிட்டார்.
தற்போதைய அரசாங்கம் பாராளுமன்ற அமர்வுகளை புறக்கணிக்கவில்லை எனவும் அரசாங்கத் தரப்பினர் சபாநாயகரையே புறக்கணித்திருப்பதாகவும் பாராளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெரும தெரிவித்தார்.
அடுத்த மாதம் 31ஆம் திகதி வரை அரச நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். நிதி செலவிடப்படுவதை தடுப்பதற்கு எதிர்க்கட்சிக்கு முடியாது. நிதி தொடர்பான பிரேரணை ஒன்றை ஆளும் கட்சியினாலேயே கொண்டுவர முடியும்இ எதிர்க்கட்சியால் அவ்வாறான பிரேரணையொன்றை கொண்டுவர முடியாது எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.