நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
புத்தளத்திலிருந்து கொழும்பு மற்றும் காலி ஊடாக ஹம்பாந்தோட்டை வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளின் சில இடங்களில் பலமான மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடும்.
பொத்துவிலிலிருந்து திருகோணமலை, காங்கேசன்துறை, மற்றும் புத்தளம் ஊடாக சிலாபம் வரையான கடற்பரப்புகளில் காற்றானது வடகிழக்கு திசையிலிருந்து வீசக்கூடும். நாட்டைச் சூழவுள்ள ஏனைய கடற்பரப்புகளில் காற்றானது வடமேற்கு முதல் தென்மேற்கு வரையான திசைகளிலிருந்து வீசக்கூடும்.
நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 30-40 கிலோ மீற்றர் வரை காணப்படுவதுடன் காங்கேசன்துறையிலிருந்து புத்தளம் மற்றும் காலி ஊடாக மாத்தறை வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட ஆழம் கூடிய கடற்பரப்புகளில் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 50-60 கிலோ மீற்றர் வரை அதிகரித்து வீசுவதுடன் அவ்வேளைகளில் கடல் கொந்தளிப்பாக காணப்படும்.
இடியுடன் கூடிய மழை பெய்யும் நேரங்களில் கடற்பகுதிகளில் அவ்வப்போது (மணித்தியாலத்துக்கு 70-80 கிலோ மீற்றர் வரையான அதிகரித்த வேகத்தில்) பலமான காற்று வீசுவதுடன் அக்கடற்பிரதேசங்கள் கொந்தளிப்பாகவும் காணப்படும் என்றும் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.