உலகவாழ் இந்துக்கள் இன்று தீபாவளி பண்டிகையை கொண்டாடுகின்றனர். அதர்மம் அழிக்கப்பட்டு, தர்மம் நிலைநாட்டப்பட்ட தினமாக தீபாவளி கொண்டாடப்படுகிறது. பல்வேறு ஐதீகங்களை அடிப்படையாகக்கொண்டு தீபாவளி ஒவ்வொரு நாடுகளில் கொண்டாடப்படுகிறது. ஆணவம், அக்கிரமம், அதர்மம், கொடூரம் ஆகியவற்றை அழித்து, அவற்றின் விளைவுகளிலிருந்து உலகை காப்பாற்றிய அற்புத திருநாளாக தீபாவளி கொண்டாடப்படுகிறது. நரகாசுரன் எனும் அரக்கன் வதம் செய்யப்பட்ட நாளை நினைவுகூறும் வகையில் தீபாவளி பண்டிகையை உலகெங்கிலுமுள்ள இந்துக்கள் சிறப்புடனும் பெருமையுடனும் கொண்டாடுகின்றனர்.
மக்களையும், தேவர்களையும் அதிகார செருக்கில் துன்புறுத்திய நரகாசுரன், கிருஷ்ண பரமாத்மாவினால் வதம் செய்யப்பட்டான். தனது உயிர் போகும் தருவாயில் தனது கொடுமைகளை உணர்ந்த நரகாசுரன் தனது இறுதி ஆசை குறித்து கிருஷ்ண பரமாத்மாவிடம் மனமிறங்கி வேண்டினான். தான் இதுவரை செய்த கொடுமைகளை பொறுத்தருள வேண்டுமெனவும் கொடியவனாகிய தான் உயிர்துறக்கும் இந்நாளை தொல்லை, துயர் துன்பங்கள் நீங்கி, சுபீட்சம் நிறைந்த திருநாளாக மக்கள் கொண்டாட வேண்டுமென வரம் வேண்டினான். இதுவே தீபாவளி தினத்தின் வரலாற்று கதையாகும். இந்துக்கள் நன்னாளான தீபாவளி தினத்தை பிரகாசம் எனும் அகல்விளக்குகளை ஏற்றியும், பட்டாசுகளை கொளுத்தியும் பண்டிகையை கொண்டாடுகின்றனர். இன்றைய நாளில் புத்தாடைகளை அணிந்து கோவில்களுக்கு சென்று விசேட பூஜைகளில் பங்கேற்பதும் இந்துக்களின் வழமையாகும்.