பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபா சம்பள அதிகரிப்பை வலியுறுத்தி நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் கவனயீர்ப்பு போராட்டங்கள் இடம்பெற்று வருகின்றன. அதற்கமைய இன்றையதினம் தெரணியகல பகுதியில் பாரிய ஆர்ப்பாட்டமொன்று இடம்பெற்று வருகிறது.
தெரணியகல, தெஹியோவிட்ட மற்றும் யட்டியாந்தோட்ட ஆகிய பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட 15 தோட்டங்களின் ஆயிரக்கணக்கான மக்கள் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார். அவர்கள் உடபாஹ சந்தியிலிருந்து தெஹியோவிட்ட நகர் வரையான 7 கிலோமீற்றர் தூரத்திற்கு நடைபயணமாக சென்று தமக்கான சம்பள அதிகரிப்பை கோரி கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்துள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
இதேவேளை பெருந்தோட்ட தொழிலாளர்களின் ஆயிரம் ரூபா அடிப்படை சம்பள அதிகரிப்பை வலியுறுத்தி நாளையதினம் கொழும்பு காலிமுகத்திடலில் கறுப்பு சட்டை போராட்டமொன்று இடம்பெறவுள்ளது. கொழும்பிலுள்ள மலையக இளைஞர்களின் சுயாதீன ஏற்பாட்டில் குறித்த கவனயீர்ப்பு போராட்டம் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.