நோர்வே உயர் மந்திரிகள் சபைக் கட்டடத்திற்கு கடந்த 5ஆம் திகதி விஜயம் செய்த பிரதமர் உள்ளிட்ட தூதுக் குழுவினரை ரூனே உள்ளிட்ட பணியாட் தொகுதியினர் வரவேற்றனர்.
சபையின் உட்பகுதியில் அந்நாட்டு மந்திரிகள் சபையின் வரலாறு மற்றும் சம்பிரதாயங்கள் தொடர்பாக ரூனே விடயங்களைத் தெளிவுபடுத்தினார்.
அதன் பின்பு உயர் மந்திரிகள் சபைத் தலைவரின் உத்தியோகபூர்வ கூடத்தில் பேச்சுவார்த்தைகள் ஆரம்பமாகின.
இலங்கை அரசியலில் பெண்களின் பங்கேற்பை அதிகரிப்பதற்குப் புதிய சட்டதிட்டங்களை இயற்றியமை தொடர்பாக தலைவர் இலங்கை அரசாங்கத்திற்குத் தனது நன்றிகளைத் தெரிவித்துக்கொண்டார்.
ரூனே இலங்கையில் மேற்கொள்வதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ள கல்விச் சீர்திருத்தங்கள் தொடர்பான விடயங்களைக் கேட்டறிந்தார். தரமான கல்வி முறைமையொன்றை உருவாக்குவதற்கான அரசாங்கத்தின் வேலைத்திட்டத்தைத் தெளிவுபடுத்திய விக்கிரமசிங்க அவர்கள், 13 வருட கட்டாயக் கல்வி ஊடாக சாதாரண தரப் பரீட்சையின் பின்பு பாடசாலையிலிருந்து விலகிச் செல்ல வேண்டியேற்படும் மாணவர்கள் அனைவருக்கும் புதிய எதிர்கால எதிர்பார்ப்புக்களை ஏற்படுத்திக் கொள்வதற்கான வழி திறந்து விடப்படுவதாக சுட்டிக் காட்டினார்.
2015 ஆம் ஆண்டு பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்ட பின்பு பாராளுமன்றத்தைப் பலப்படுத்துவதற்கு மேற்கொண்ட நடவடிக்கைகளையும் பிரதமர் இதன்பேர்து தெளிவுபடுத்தினார்.
இந்த நிகழ்வில் கடற்றொழில், நீரியல் வளங்கள் அபிவிருத்தி மற்றும் கிராமிய அபிவிருத்தி அமைச்சர் விஜித் விஜயமுனி செய்சா, பாராளுமன்ற உறுப்பினர்களான காவிந்த ஜயவர்தன, ஹேஷா விதானகே, பிரதம அமைச்சரின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க, நோர்வே நாட்டுக்கான இலங்கைத் தூதுவர் பேராசிரியர் அருஷா குரே, பிரதம அமைச்சரின் மேலதிக செயலாளர் சமன் அதாவுத ஹெட்டி, விசேட உதவியாளர் சென்ட்ரா பெரேரா உள்ளிட்ட இலங்கைத் தூதுக் குழுவினர் கலந்துகொண்டனர்.