கலாநிதி ஷிராணி பண்டாரநாயக்கவை பிரதம நீதியரசர் பதவியிலிருந்து விலக்குவதற்கு முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ அன்று நடவடிக்கை எடுத்த போது, அதற்கு தான் எதிர்ப்பு தெரிவித்ததாக இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் டியூ குணசேகர தெரிவித்துள்ளார். அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சராக தான் தெரிவித்த எதிர்ப்பை முன்னாள் ஜனாதிபதி பொருட்படுத்தவில்லையெனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
மகிந்த ராஜபக்ஷவின் ஆட்சியில் ஷிராணி பண்டாரநாயக்கவை பதவி நீக்கம் செய்யும் போது, அது சரியான நடவடிக்கையல்லவென அவரிடம் தெரிவித்தேன். பிரதம நீதியரசரை பதவி விலக்கும் போது அது தொடர்பான தீர்மானங்களை மேற்கொள்ள குறைந்தபட்சம் ஓய்வு பெற்ற உச்ச நீதிமன்ற நீதியரசர்கள் மூலம் விசாரித்து, பாராளுமன்றத்தின் நடைமுறைகளுக்கு அமைவாக செயல்பட வேண்டுமென நான் தெரிவித்தேன். அதற்கு அவர் சம்மதிக்கவில்லை. நாளையே என்னை அமைச்சரவையிலிருந்து விலக்கினாலும் எனது கொள்கையிலிருந்து மாற மாட்டேன் என மகிந்த ராஜபக்ஷவிடம் தெரிவித்தேன் எனவும் குறிப்பிட்டார்.
இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரான ஈலியன் நாணயக்காரவின் 3 வது நினைவு தின வைபவத்தில் உரையாற்றும் போதே டியூ குணசேகர இவ்வாறு தெரிவித்தார். கும்புறுபிட்டியவிலுள்ள சனச கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற இவ்வைபவத்தில் ஈலியன் நாணயக்காரவின் பாரியார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.