அமெரிக்காவில் எதிர்வரும் நவம்பர் மாதம் நடைபெறவுள்ள இடைக்கால தேர்தலில் தலையிடுவதற்கு சீனா முயற்சித்து வருவதாக அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் குற்றஞ்சாட்டியுள்ளார். ஐக்கிய நாடுகள் ஸ்தாபனத்தின் பொதுச்சபை அமர்விற்கு இணைவாக நடைபெற்ற அரச தலைவர்கள் மாநாட்டில் உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார்.
அமெரிக்கா சீனாவுக்கு இடையிலான வர்த்தகத்தில் சீனாவை எதிர்க்கும் முதலாவது ஜனாதிபதி தான் என்பதால் தான் தேர்தலில் வெற்றி பெறுவதை சீனா விரும்பவில்லையெனவும் அவர் தெரிவித்துள்ளார்.
தனது கட்சியின் கொள்கை பிரகடனங்களுக்கு சீனா இணங்காமையினால் இவ்வாறு அழுத்தங்களை பிரயோகிக்க முயற்சிப்பதாகவும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார். எவ்வாறாயினும் சீனா இக்குற்றச்சாட்டை முழுமையாக நிராகரித்துள்ளதுடன் இது நியாயமற்ற ஒரு குற்றச்சாட்டாகுமெனவும் தெரிவித்துள்ளது.
சீன வெளியுறவு அமைச்சர் வெங்க் யி கருத்து தெரிவிக்கையில் ஏனைய நாடுகளின் உள்விவகார செயல்பாடுகளில் தலையிடாத அடிப்படை தர்மத்தை சீனா பின்பற்றுவதாக தெரிவித்தார். சீனாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையில் கடந்த காலங்களில் வரி விகிதாசாரங்கள் அதிகரிக்கப்பட்டதையடுத்து இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தக மோதல்கள் உக்கிரமடைந்திருந்தன.