தேயிலை தொழிற்துறையை அபிவிருத்தி செய்வதற்கென 5 வருட திட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. மூன்று முன்னணி பிரிவுகள் தொடர்பில் அவதானம் செலுத்தப்படும் வகையில் 5 வருட திட்டம் நடைமுறைப்படுத்தப்படுவதாக பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சின் செயலாளர் ஜே.ஏ.ரஞ்சித் தெரிவித்துள்ளார். மீள் தேயிலை நடுகை, புதிதாக தேயிலை கன்றுகளை நடுதல் மற்றும் இயந்திரமயமாக்கல் ஆகிய மூன்று பிரிவுகள் குறித்து முக்கிய கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
5 வருட திட்டத்திற்கென தேயிலை தொழிற்துறையுடன் தொடர்புடைய சகல பிரிவுகளினூடாகவும் யோசனைகள் பெற்றுக்கொள்ளப்படுமென அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார். தேயிலை ஏற்றுமதியாளர்கள், தொழிற்சாலைகளின் உரிமையாளர்கள், சிறு தேயிலை தோட்ட உரிமையாளர்கள் உள்ளிட்ட தேயிலை தொழிற்துறையுடன் தொடர்புடைய பல்வேறு பிரிவினர் தமது யோசனைகளை முன்வைத்துள்ளனர். 2019ம் ஆண்டு முதல் 2024ம் ஆண்டு வரையான 5 வருடத்திற்கு திட்டத்தை நடைமுறைப்படுத்த உத்தேசிக்கப்பட்டுள்ளது. தற்போது காணப்படும் விளைச்சல் நிலத்தின் அளவை உரிய முறையில் முகாமைத்துவப்படுத்துவதனூடாக அறுவடையை இருமடங்காக அதிகரிக்க முடியுமென பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சு தெரிவித்துள்ளது. தேயிலை தொழிற்துறையில் காணப்படும் சவால்களை வெற்றிக்கொள்வதற்கென 5 வருட திட்டத்தை நடைமுறைப்படுத்த முடியுமென அமைச்சு மேலும் குறிப்பிட்டுள்ளது.