இலங்கை – மியன்மார் ஜனாதிபதிகளுக்கிடையில் இருதரப்பு பேச்சுவார்த்தை
Related Articles
பிம்ஸ்டெக் மாநாட்டில் கலந்துகொள்வதற்காக நேபாள தலைநகர் காத்மண்டுவுக்கு சென்றுள்ள ஜனாதிபதி மைதிரிபால சிறிசேனவுக்கும், மியன்மார் ஜனாதிபதிக்குமிடையில் இருதரப்பு பேச்சுவார்த்தை இடம்பெற்றுள்ளது. ‘சமாதானம், சுபீட்சம் மற்றும் பேண்தகு தன்மைவாய்ந்த வங்காள விரிகுடாவை நோக்கி’ எனும் தொனிப்பொருளில் இம்முறை நான்காவது தடவையாக இம்மாநாடு நடைபெறுகிறது. பல்துறை தொழில்நுட்பம் மற்றும் பொருளாதார ஒத்துழைப்பு தொடர்பான வங்காள விரிகுடாவின் வாயில் என பொருள்ப்படும் இம்மாநாட்டில் பங்குகொள்வதற்காக ஜனாதிபதி மைதிரிபால சிறிசேன நேற்றைய தினம் நேபாளம் நோக்கி பயணித்தார். அங்கு அவருக்கு மகத்தான வரவேற்பளிக்கப்பட்டது.
அதன் ஒரு கட்டமாக மாநாட்டில் பங்கேற்பதற்கென வருகைத்தந்துள்ள அரச தலைவர்களுடன் ஜனாதிபதி இருதரப்பு பேச்சுவார்த்தைகளில் ஈடுபடவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய மியன்மார் ஜனாதிபதியை இன்றைய தினம் ஜனாதிபதி சந்தித்துள்ளார். பங்களாதேஷ், பூட்டான், இந்தியா, மியன்மார், நேபாளம், இலங்கை மற்றும் தாய்லாந்து ஆகிய 7 தெற்காசிய மற்றும் தென்கிழக்காசிய வலயமைப்பை கொண்டதாக பிம்ஸ்டெக் அமைப்பு காணப்படுகின்றது. குறித்த பிம்ஸ்டெக் மாநாடு இன்றும், நாளையும் நடைபெறும்.