இலங்கை நீர்பாசன துறையின் புதியவொரு அத்தியாயமாக 2400 கிராமிய குளங்களை அபிவிருத்தி செய்யும் மிகப்பெரும் நீர்பாசன திட்டத்தின் அங்குரார்ப்பண வைபவமும் வயம்ப வாவியின் இரண்டாம் கட்ட பணிகளும் இன்று ஆரம்பித்து வைக்கப்பட்டன. ஜனாதிபதி தலைமையில் இடம்பெற்ற இவ்வைபவத்தில் விவசாயத்தையும் விவசாயிகளின் பொருளாதாரத்தையும் கட்டியெழுப்ப பாரிய திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டு வருவதாக ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன இங்கு தெரிவித்தார்.
பொல்பிதிகம கும்புக்குலாவ வாவியின் அருகில் பாரம்பரிய விவசாய தொழில்நுட்பத்தை முன்னெடுத்து சென்று நாட்டின் விவசாய பொருளாதாரத்தில் புதியவொரு மறுமலர்ச்சியை ஏற்படுத்துவதற்காக மிகப்பெரும் நீர்பாசன திட்டத்தின் ஆரம்ப வைபவம் இன்று இடம்பெற்றது. நீரை கொண்டு செல்லும் சுரங்க பாதை நிர்மாண பணிகளும் இதன் போது இடம்பெற்றன. பாறையை குடைந்து இந்த சுரங்க பாதை நிர்மாணிக்கப்படுகின்றது. கிராமிய வாவிகளை அபிவிருத்தி செய்யும் திட்டத்தின் கீழ் குருநாகல் மாவட்டத்தில் மட்டும் 300 குளங்கள் புனரமைக்கப்படவுள்ளன.
இதேவேளை வயம்ப வாவி திட்டத்தின் இரண்டாம் கட்டத்தின் மூலம் வடமேல் மாகாணத்தில் மேற்கு பகுதிக்கு நீர் விநியோகிக்கப்படுகின்றது. மகாவலி திட்டம் ஆரம்பிக்கப்பட்ட நாள் முதல் வடமேல் மாகாண விவசாயிகள் முன்வைத்த நீண்டநாள் கோரிக்கையை நிறைவேற்றும் வகையில் இத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டது. இச்செயற்றிட்டத்திற்கான திட்ட அலுவலக கட்டடத்தினை ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன திறந்து வைத்தார். இதனை தொடர்ந்து பொல்பிதிகம விளையாட்டு மைதானத்தில் கூட்டம் ஒன்று இடம்பெற்றது. இங்கு உரையாற்றிய ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன நிலத்துடன் போராடி நாட்டுக்கு அன்னம் வழங்கும் விவசாயிகளின் பிரச்சினைகள் தொடர்பில் தமக்கு சிறந்த புரிந்துணர்வு இருப்பதாக கூறினார். பல்வேறு கஷ்டங்களை அனுபவித்து வரும் வடமேல் மாகாண மக்களின் வாழ்க்கை போக்கு முழுமையாக வயம்ப வாவி திட்டத்தின் மூலம் மாற்றப்படுமென தெரிவித்தார்.