யாழ்ப்பாணம் மயிலிட்டி மீன்பிடி துறைமுகத்தின் அபிவிருத்தி பணிகள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் இன்று ஆரம்பித்துவைக்கப்பட்டுள்ளது. அமைச்சர் விஜித் விஜயமுனி சொய்சாவின் ஏற்பாட்டில் இதுதொடர்பான நிகழ்வு இடம்பெறவுள்ளது. 30 வருடகால யுத்தத்தினால் குறித்த துறைமுகம் செயலிழந்து காணப்பட்டது.
யுத்தத்திற்கு முன்னர் இலங்கை மீன்பிடி உற்பத்தியில் 30 வீதத்திற்கு மேல் பங்களிப்பு செய்த மிக முக்கிய துறைமுகமாக மயிலிட்டி துறைமுகம் அடையாளப்படுத்தப்பட்டுள்ளது. யுத்தத்தினால் இது செயலழிந்ததன் காரணமாக வடமாகாணத்திற்கும் தேசிய உற்பத்திக்கும் பாரிய பாதிப்பு ஏற்பட்டது.
நல்லாட்சி அரசாங்கத்தின் 2018ம் ஆண்டிற்கான விசேட வரவு செலவு திட்ட பிரேரணையின் கீழ் இத்துறைமுகத்தை மீள் புனரமைக்க 150 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்டது. அதனூடாக நுழைவாயிலை ஆழப்படுத்தல், அலைத்தடுப்பு கட்டுமாணம், இறங்குதுறை புனரமைப்பு, எரிபொருள் நிரப்பு நிலையம், குளிரூட்டப்பட்ட அறை, நீர் மற்றும் மின்சாரம் விநியோகம் என்பன முன்னெடுக்கப்படுகின்றன. மேலும் ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் 30 மில்லியன் ரூபா நிதியும் கிடைக்கப்பெற்றது. இதனூடாக நிர்வாக கட்டிடம், மீன்பிடி வலைபின்னும் நிலையம், நீர்த்தாங்கிகள், கழிவு அறைகள் என்பன நிர்மாணிக்கப்படுகின்றன. இரண்டாம் கட்டத்தினூடாக 245 மில்லியன் ரூபா செலவில் அலைத்தடுப்பு கட்டுமாணத்தின் முழுமையான புனரமைப்பு, ஏலமிடும் நிலையம், ஹாபர் பேசின் மற்றும் நுழைவாயிலை மேலும் ஆழப்படுத்தல் என்பன மேற்கொள்ளப்படவுள்ளன. இதன் நிர்மாண பணிகளையே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று ஆரம்பித்து வைத்தமை குறிப்பிடத்தக்கது.