ரஷ்யாவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது அது ரிக்கடர் அளவுகோலில் 6 ஆக பதிவாகியுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. ரஷ்யாவின் கிழக்குப் பகுதியில் இன்று அதிகாலை 1.40 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால் குறித்த பகுதியிலுள்ள கட்டிடங்கள் குலுங்கியுள்ளன. அச்சமடைந்த பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியேறியுள்ளனர். பலமான நிலநடுக்கம் ஏற்பட்ட போதிலும் பாரிய சேதங்கள் எதுவும் ஏற்படவில்லையென ரஷ்ய தகவல்கள் தெரிவிக்கின்றன. நிலநடுக்கம் ஏற்பட்ட பகுதியில் 160 எரிமலைகள் காணப்படுகின்றன. அதில் 29 எரிமலைகள் உயிர்ப்புடன் உள்ளன. இந்நிலையில் நிலநடுக்கம் காரணமாக எரிமலை வெடிக்கலாமென பொதுமக்கள் அச்சமடைந்தனர். இதேவேளை நிலநடுக்கம் காரணமாக உலக கிண்ண கால்பந்தாட்ட போட்டிகளுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாதென ரஷ்ய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். போட்டி நடைபெறும் இடத்திலிருந்து வெகு தொலைவிலேயே நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக ரஷ்ய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.