உள்ளுர் விமான சேவைகளை அபிவிருத்தி செய்வதன் மூலம் பொருளாதார நன்மைகள் பலவற்றை அடையலாம் என போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.
உள்ளுர் விமான சேவைகள் சுற்றுலாதுறையின் வளர்ச்சிக்கும் வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கும் மிகவும் இன்றியமையாததாகும். அரசாங்கத்துடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அபிவிருத்தி திட்டங்களை பாதுகாப்பதற்கு இதுபோன்ற வசதிகளை நாம் நிச்சயம் ஏற்படுத்திக்கொடுக்க வேண்டும். அத்துடன் உள்ளுர் விமான சேவையை பொதுமக்களும் பயன்படுத்தக்கூடிய வகையில் நாம் திட்டங்களை வகுக்க வேண்டும். அத்துடன் இந்த விமான சேவை இலாபத்தில் இயங்க வேண்டும். அதற்கு தேவையான வசதிகளை நாம் ஏற்படுத்திக்கொடுக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.
இலங்கையில் உள்ளுர் விமான சேவைகளை அபிவிருத்தி செய்ய அரசாங்கம் பாரிய திட்டங்களை வகுத்துள்ளதாக ஐ.டப்ளியூ.எஸ் தனியார் விமான சேவை நிறுவனத்திற்கு சொந்தமான வெலிசரையில் உள்ள ஹெலிகப்டர் தரிப்பிடத்தில் இடம்பெற்ற அங்குரார்ப்பண நிகழ்வில் உரையாற்றும் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார். இந்நிகழ்வில் அமைச்சர் ரவூப் ஹக்கீம், விமான நிலையம் மற்றும் விமான சேவைகள் நிறுவனத்தின் நிறைவேற்று பணிப்பாளர் ஜொஹேன் ஜயரட்ன, ஐ.டப்ளியூ.எஸ் தனியார் விமான சேவைகள் நிறுவனத்தின் தலைவர் ஐ.டப்ளியூ.சேனாநாயக்க உட்பட பலர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.