புனிதமான இந்த பொசன் பௌர்ணமி தினத்தில் மனித குலத்தை முதன்மைப்படுத்திய ஒட்டுமொத்த இயற்கைக்கும் நன்மை பயக்க எம்மை முழுமையாக அர்ப்பணிக்க உறுதி பூணுதல் வேண்டும் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி வெளியிட்டுள்ள பொசன் பௌர்ணமி தின செய்தியில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது,
மனித நாகரிகத்தின் திருப்புமுனைகள் ஆயுத பலத்தால் நிர்ணயிக்கப்படும் பின்னணியில் கருணையை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்ட நாகரிகத்தின் நற்கீர்த்தியினை எழச் செய்யும் பொசொன் பௌர்ணமி தினம், ஒரு சிரேஷ்ட இனத்தின் புண்ணியகரமான ஆரம்பத்தையே எமக்கு நினைவூட்டுகின்றது.
புத்த வருடம் 236 ஆம் ஆண்டில் இன்று போன்றதொரு பௌர்ணமி தினத்தில் இடம்பெற்ற மகிந்த தேரரின் இலங்கை விஜயத்தினால் எமக்கு கிடைக்கப்பெற்றது புதியதோர் தர்மம் மாத்திரம் அல்ல. அந்த உன்னதமான நிகழ்வை அடிப்படையாகக் கொண்டு பௌத்த கலாசாரத்தினாலும் நல்லொழுக்கத்தினாலும் தர்மத்தினாலும் போதிக்கப்பட்ட ஒரு இனமும் அதனால் உருவாகியிருக்கின்றது. அத்தோடு கல்வி, இலக்கியம், கட்டடக்கலை, கமத்தொழில் மட்டுமன்றி வளமான, பரிபூரண வாழ்க்கை முறையும் எமக்கு கிடைத்திருக்கின்றது.
மானிட வர்க்கத்திற்கு மாத்திரமன்றி விலங்கினங்களுக்கும் செடி கொடிகளுக்கும் ஆறுகள், குளங்கள் உள்ளிட்ட ஒட்டுமொத்த இயற்கைச் சூழலுக்கும் பாதுகாப்பைப் பெற்றுக்கொடுக்கின்ற சகவாழ்வு கோட்பாட்டினைக் கொண்ட ஒட்டுமொத்த உலகத்துடனும் ஒன்றிணைந்த வாழ்க்கை முறை எமக்கு கிடைக்கப் பெற்றதற்கு மகிந்த தேரரினால் எமக்கு அறிமுகம் செய்து வைக்கப்பட்ட பௌத்த தர்மத்தின் ஒளியே காரணமாகும். பிற்காலத்தில் ஒரு இனம் என்ற வகையில் எமக்கு முகங்கொடுக்க நேர்ந்த பாரிய சவால்களைக் கண்டு தளராது எழுந்து நிற்பதற்கான பாரிய உந்து சக்தியினை உருவாக்கிக் கொடுத்ததும் அன்று எமது மக்களின் ஆன்மாவில் ஆழப்பதிந்த பௌத்த அறிவே ஆகும்.
அந்தவகையில் புனிதமான இந்த பொசன் பௌர்ணமி தினத்தில் ஒரு வனப்பகுதியில் மாமரத்து நிழலில் புனித பௌத்த போதனைகளை செவிமடுத்த ஒரு இனம் என்ற வகையில் நாம் மனம், வாக்கு, காயம் ஆகியவற்றில் ஒழுக்கத்தைப் பேணும் அதேவேளை இம்மனித குலத்தை முதன்மைப்படுத்திய ஒட்டுமொத்த இயற்கைக்கும் நன்மை பயக்க எம்மை முழுமையாக அர்ப்பணிக்க உறுதி பூணுதல் வேண்டும்.
உங்கள் அனைவருக்கும் புண்ணியகரமான பொசொன் பௌர்ணமி தின வாழ்த்துக்கள்..!
இதேவேளை பிரதமர் தனது வாழ்த்துச்செய்தில்,
புத்தர் போதித்த தர்மத்தைப் பின்பற்றுவோமாயின் அந்தத் தடைகளைத் தகர்த்தவாறு நிலைபேறான சமாதானம் மற்றும் நல்லிணக்கத்தை எமது நாட்டில் கட்டியெழுப்ப முடியும் என்று பிரதமர் ரணில் விக்கிரம சிங்க தெரிவித்துள்ளார்.
பிரதமரின் பொசன் பௌர்ணமி தின செய்தியில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது,
புத்த மதம் கிழக்குப் பகுதியில் தோற்றம் பெற்ற தனிச்சிறப்பான ஆன்மீகத் தத்துவமாகும். அன்பு, பரிவிரக்கம், கருணை, மனஅமைதி என்பவற்றை அடிப்படையாகக் கொண்ட, சுதந்திர சிந்தனையை ஊக்குவிக்கும் புத்த மதத்தினை சமாதானம், நல்லிணக்கத்திற்கு, ஆன்மீக மேம்பாட்டிற்கான வழிமுறையாகக் கொண்டு முழு உலகிற்கும் அதன் உண்மையான உள்ளடக்கத்தை அனுபவரீதியாக அறியச் செய்வது எமது பொறுப்பாகும்.
மஹிந்த தேரர் தலைமையிலான குழுவினரால் புத்த மதம் அறிமுகப்படுத்தப்பட்ட பின்பு எமது நாட்டின் ஆட்சி பீடம், இலக்கியக் கலைகள், விவசாயம், நீர்ப்பாசனம் போன்ற துறைகள் உட்பட முழு சமூகத்திலும் தெளிவான உயிர்ப்பு ஏற்பட்டது. புத்த மதத்தின் உள்ளடக்கம் நவீன முன்னேற்றமடைந்த சமூகத்தில்கூட ஆன்மீகரீதியாக செழிப்படைந்த, சிறந்த மனிதர்களை உருவாக்குவதற்கு, சமூகத்தை மிகவும் நியாயமான, சிறந்த இடமாக மாற்றியமைப்பதற்கு மிகவும் உதவுகிறது.
நாம் அந்த தர்மத்தின் ஒளியை, அதன் விளக்கத்தைப் பெற்றுக் கொள்வோமாயின் வெறுப்பு, குரோதம், ஒற்றுமையின்மை எம்மிடம் காணப்படுவதற்கு எந்த வாய்ப்புமில்லை. இதற்குக் காரணமாய் அமையும் பல்வேறுபட்ட சமூக மற்றும் பொருளாதாரக் காரணிகள் உள்ளன என்பது உண்மையே. எனினும் உண்மையாகவே புத்தர் போதித்த தர்மத்தைப் பின்பற்றுவோமாயின் அந்தத் தடைகளைத் தகர்த்தவாறு நிலைபேறான சமாதானம் மற்றும் நல்லிணக்கத்தை எமது நாட்டில் கட்டியெழுப்ப முடியும்.
அதற்காக அர்ப்பணிப்புடன் செயற்படுவது நம் அனைவரினதும் பொறுப்பாகும். தர்மத்தினைப் புரிந்து கொள்வதன் மூலம் அனைவரது உள்ளங்களும் ஞானத்தினால் நிரம்பும் பொசொன் தினமாக அமையட்டும் என வாழ்த்துகிறேன்