சர்வதிகார ஆட்சி மற்றும் அடக்குமுறைக்கு மீண்டும் நாட்டில் இடமளிக்க போவதில்லையென ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். நிக்கவரட்டிய பகுதியில் இடம்பெற்ற வைபவம் ஒன்றில் உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனை தெரிவித்தார்.
2015 ஜனவரி எட்டாம் திகதி அப்போது நாட்டில் இருந்த சர்வதிகார ஆட்சிக்கு எதிராக வாக்களித்தனர். அதன் ஊடாக ஆட்சிமாற்றம் ஏற்பட்டது. அந்த அனுபவங்களை மறந்து இன்று மீண்டும் நாட்டுக்கு சர்வதிகார ஆட்சியை வேண்டி நின்றாலும் நாட்டு மக்கள் 2015ஆம் ஆண்டு ஜனவரி எட்டாம் திகதி வைத்த எதிர்பார்ப்புக்களை சரிவடையச்செய்ய இடமளிக்க மாட்டோம் என்றும் ஜனாதிபதி வலியுறுத்தியுள்ளார்.
இங்கு உரையாற்றிய ஜனாதிபதி,
நான் இதனை விட கடுமையாக வேண்டுமென சிலர் கூறுகின்றார்கள். கடுமையான தலைவராக வேண்டுமென கூறுகின்றனர். சில தேரர்கள் நேற்று ஊடகங்கள் மூலம் கூறுவதை நான் செவிமடுத்தேன். ஒரு சர்வதிகார ஆட்சி வேண்டுமென கூறுகின்றனர். ஒரு சர்வதிகாரி வேண்டுமெனவும் கூறுகின்றனர். நான் ஒரு பௌத்தன் என்ற வகையில் தேரர்களை மதிக்கிறேன். ஆனால் நீங்கள் எந்த சந்தர்ப்பத்திலாவது இந்த நாட்டுக்கு ஒரு சர்வதிகாரி வேண்டுமென கூறுவதாக இருந்தால் நீங்கள் தவறு இழைக்கும் ஓர் இடம்முண்டு. ஆட்சி கடுமையானது, ஆட்சி மோசமானது, சர்வதிகாரத்தை நோக்கி செல்கின்றது என்ற காரணத்தினால் 2015ஆம் ஆண்டு ஜனவரி மாதம் எட்டாம் திகதி இந்த நாட்டு மக்கள் ஒரு மாற்றத்தை கொண்டு வந்தார்கள். அதனை மறந்து விட வேண்டாம். சுதந்திரத்தை உறுதிப்படுத்தி, ஜனநாயகத்தை பலப்படுத்தி, மனித உரிமைகளை பாதுகாத்து, ஊடக சுதந்திரத்தை வழங்கி, இவை அனைத்தையும் வழங்கிய நிலையில் அதனை ;தவறாக சிலர் பயன்படுத்த முற்பட்டுள்ளனர். வழங்கிய ஆயுத்தத்தை கொண்டே எம்மை தாக்க முற்படுகின்றனர். நீங்கள் கேட்கும் சர்வதிகாரி, நீங்கள் கேட்கும் அடக்குமுறையாளர்கள், இராணுவ ஆட்சியாகவிருந்தாலும் சரியென கூறுகின்றவர்கள், அந்த அனுபவங்களை பெறாதவர்களே அவ்வாறு கூறுகின்றனர். ஜனநாயகத்தை மதிக்கும் மக்கள் புhத்திஜீவிகள் உள்ளனர். ஜனநாயகத்தை பாதுகாக்கும் அரசியல்வாதிகளும் உள்ளனர். இவை அனைத்திற்கும் மத்தியில் அடக்கு முறைகளை எதிர்பார்க்கும் சிலர், நீங்கள் வேண்டி நிற்கும் சர்வதிகாரி, நீங்கள் கேட்கும் இராணுவ ஆட்சி ஏற்பட ஒருபோதும் நாம் இடமளிக்க மாட்டோம். வந்த பாதையில் தவறிழைத்துக்கொள்ள வேண்டாம். வழி தவறி படுபாதாளத்தில் விழ வேண்டாம் என தெரிவித்தார்.
புதிய மாதிரி கிராம திட்டத்தின் கீழ் 81வது மாதிரி கிராமமான குருநாகல் மாவட்டத்தில் நிக்கவரட்டிய கொடவெஹர வெஹரபுற வீடமைப்பு திட்டத்தை ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன ஆரம்பித்து வைத்தார். 6.67 ஏக்கர் பரப்பளவில் ஏற்படுத்தப்பட்டுள்ள இவ்வீடமைப்பு திட்டத்தில் 32 வீடுகள் நிர்மாணிக்கப்பட்டுள்ளன. குடிநீர், மின்சாரம், பிரவேச வீதிகள், உள்ளக வீதிகள் ஆகியனவும் ஏற்படுத்தப்பட்டுள்ளன. வீடமைப்பு திட்டத்தை ஆரம்பித்து வைத்த ஜனாதிபதி அவற்றை பார்வையிட்டார். அங்கு ஏற்படுத்தப்பட்டிருந்த மூலிகை பூங்காவையும் ஜனாதிபதி பார்வையிட்டார். அங்கு மரக்கன்று ஒன்றையும் ஜனாதிபதி நாட்டினார். வீடுகளின் உரிமையாளர்களுக்கு அவற்றின் திறப்புக்களும் ஜனாதிபதியினால் வழங்கப்பட்டன.அமைச்சர் சஜித் பிரேமதாசவும் இந்நிகழ்வில் கலந்து கொண்டார்.