கேகாலை மாவட்ட விவசாயிகளின் மரவள்ளி அறுவடையை கொள்வனவு செய்யும் நடவடிக்கை நாளை ஆரம்பமாகவுள்ளது. கேகாலை மாவட்ட மரவள்ள செய்கையாளர்களுக்கு உரிய விலை கிடைக்காமையினால் அறுவடையை விற்பனை செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகதகவல்கள் தெரியவந்தன. இதற்கமையவே விவசாயிகளிடமுள்ள சுமார் ஒரு இலட்சம் கிலோ கிராம் மரவள்ளியை உடனடியாக கொள்வனவு செய்வதற்கு தலையிடுமாறு அமைச்சர் மகிந்த அமரவீர இலங்கை ஹதபிம அதிகார சபையின் தலைவர் இந்திக குருகேவிற்கு பணிப்புரை விடுத்துள்ளார்.
இதற்கு நியாயமான விலையை வழங்குமாறும் அமைச்சர் கோரிக்கை விடுத்துள்ளார். இதற்கமைய மரவள்ளியை கொள்வனவு செய்யும் நடவடிக்கைகள் நாளை ஆரம்பிக்கப்படவுள்ளதுடன் இலங்கை ஹதபிம அதிகார சபையின் விற்பனை நிலையங்கள் ஊடாக விற்பனை செய்வதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 40 மற்றும் 50 ரூபாவிற்கு இடையில் மரவள்ளி கொள்வனவு செய்யப்படவுள்ளது. ஹதபிம அதிகார சபை ஊடாக ஒரு இலட்சம் கிலோ கிராம் மரவள்ளியை கொள்வனவு செய்யவுள்ளதாக வெளியான செய்தியை தொடர்ந்து நீர் கொழும்பை சேர்ந்த வர்த்தகர் ஒருவர் 40 தொன் மரவள்ளியை ஒரு கிலோ கிராம் 45 ரூபாவீதம் கொள்வனவு செய்துள்ளதாகவும் விவசாய அமைச்சுக்கு தகவல் கிடைத்துள்ளது.