சிறுவர்களை பாதுகாப்போம்’ தேசிய வேலைத்திட்டத்தின் கிளிநொச்சி மாவட்டத்திற்கான நிகழ்வு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் கிளிநொச்சி மத்திய கல்லூரி மைதானத்தில் நடைபெற்றது. சிறுவர் பரம்பரையை பாதுகாத்து அவர்களது உடல், உள விருத்திக்கு ஏற்ற சிறந்த சூழலை உருவாக்கும் நோக்கில் நிகழ்வு ஒழுங்குசெய்யப்பட்டிருந்தது. நிகழ்வையடுத்து கிளிநெர்சசி கனகபுரம் வித்தியாலயத்தில் நிர்மாணிக்கப்பட்டுள்ள விளையாட்டு மைதானம் மாணவர்களிடம் கையளிக்கப்படவுள்ளது. அத்தோடு வடமாகாணத்திலுள்ள சிறுவர் இல்லங்களில் தங்கியுள்ள சிறுவர்களுக்கு சிறந்த சூழலை உருவாக்கும் நோக்கில் தெரிவுசெய்யப்பட்ட சிறுவர் இல்லங்களை நவீனமயப்படுத்துவதற்கான நிதி வழங்கப்படும். சிறுநீரக நோயிலிருந்து சிறுவர்களை பாதுகாப்பதற்கென சுத்தமான குடிநீர் வசதியற்ற ஆயிரம் குடும்பங்களுக்கு நீர் சுத்திகரிப்பு உபகரணங்கள் வழங்கப்படவுள்ளன. இதேவேளை பாதுகாப்பற்ற சூழலில் வாழும் குடும்பங்களை சேர்ந்த பிள்ளைகளுக்கு மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் அமைச்சினூடாக நிதியுதவி வழங்கப்படவுள்ளதாக ஜனாதிபதி செயலகம் தெரிவித்துள்ளது.