fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

இறக்குமதி செய்யப்படும் பழங்களுக்கான வரியினை அதிகரிப்பதற்கு நடவடிக்கை

ITN News Editor
By ITN News Editor ஜூன் 14, 2018 11:38

இறக்குமதி செய்யப்படும் பழங்களுக்கான வரியினை அதிகரிப்பதற்கு நடவடிக்கை

உள்ளூர் பழ உற்பத்தியாளர்களை பாதுகாப்பதற்காக இறக்குமதி செய்யப்படும் பழங்களுக்கான வரியினை அதிகரிப்பதற்கு எதிர்காலத்தில் நடவடிக்கை எடுக்கப்படுமென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். தலவில பிரதேசத்தில் உள்ள கிராமசக்தி உற்பத்தி கிராமத்திற்கு நேற்று முற்பகல் (13) கண்காணிப்பு விஜயத்தினை மேற்கொண்டபோதே ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்தார்.

மக்களுடன் சுமூக கலந்துரையாடலில் ஈடுபட்ட ஜனாதிபதியிடம் தாம் நீண்டகாலமாக எதிர்நோக்கும் பிரச்சினைகளை மக்கள் தெரிவித்தனர். நீர்த்தட்டுப்பாடு, மின்சாரம் தொடர்பான பிரச்சினைகள், பாதை வசதிகள், விவசாய உபகரண தட்டுப்பாடுகள் மற்றும் உற்பத்திகளை சந்தைப்படுத்துவதில் எதிர்நோக்கும் பிரச்சினைகள் என்பன அவற்றில் முக்கியமானவை. பிரதேசத்தில் நிலவும் மின்சக்தி பிரச்சினைக்கு நிரந்தர தீர்வை பெற்றுக்கொடுப்பதற்கான வேலைத்திட்டம் விரைவில் நடைமுறைப்படுத்தப்படுமெனவும் ஜனாதிபதி இதன்போது தெரிவித்தார்.

இதனுடன் தொடர்பான சகல பிரச்சினைகளுக்கும் தீர்வினை பெற்றுக்கொடுப்பதற்கு மின்வலு அமைச்சு, விவசாய அமைச்சு மற்றும் ஜனாதிபதி செயலகத்தின் பிரதிநிதிகள் உள்ளிட்ட குழுவொன்றினை ஒரு வார காலத்திற்குள் குறித்த பிரதேசத்திற்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுப்பதாகவும் ஜனாதிபதி இதன்போது நம்பிக்கை தெரிவித்தார்.

அத்துடன் தமது பழ உற்பத்திகளுக்கு உரிய விலைகளை பெற்றுக்கொள்ள முடியாமை தொடர்பாக இதன்போது பிரதேச பழ உற்பத்தியாளர்கள் ஜனாதிபதியிடம் தெரிவித்ததுடன், பழங்களின் இறக்குமதியினால் தமது தொழிலுக்கு ஏற்பட்டுள்ள சவால்களுக்கு தீர்வினை பெற்றுத் தருமாறும் அவர்கள் கேட்டுக்கொண்டனர். இதன்போது கருத்து தெரிவித்த ஜனாதிபதி, பழங்கள் மற்றும் விவசாய உற்பத்தி தொடர்பில் உரிய நடவடிக்கைகளை எதிர்காலத்தில் மேற்கொள்ள எதிர்பார்ப்பதாக தெரிவித்தார்.

அதற்கமைய உள்நாட்டு பழ உற்பத்தியாளர்களை பாதுகாப்பதற்காக இறக்குமதி செய்யப்படும் பழங்களின் வரியை அதிகரிப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்படுமென ஜனாதிபதி குறிப்பிட்டார். பிரதேச வெங்காய உற்பத்தியாளர்கள் ஜனாதிபதியை சந்தித்து எதிர்வரும் வெங்காய அறுவடையின்போது வெங்காய இறக்குமதியினால் ஏற்பட்டுள்ள பிரச்சினைகளுக்கு தீர்வினை பெற்றுத் தருமாறும் கோரிக்கை விடுத்தனர். ஜனாதிபதியும் இவ்விடயத்தில் கவனம் செலுத்துவதாக தெரிவித்தார்.

கிராமசக்தி மக்கள் இயக்கத்தின் கீழ் தலவல பிரதேசத்தில் கிராம சக்தி மக்கள் சங்கத்திற்கு வழங்கப்படும் நிதி ஒதுக்கீட்டின் முதலாவது தவணை கொடுப்பனவு இதன்போது ஜனாதிபதியினால் வழங்கப்பட்டது. உணவு உற்பத்தி தேசிய செயற்திட்டத்தின் கீழ் விவசாய திணைக்களத்தினால் நிர்மாணிக்கப்பட்ட தலவில சூரிய சக்தி திட்டத்தையும் ஜனாதிபதி இதன்போது பார்வையிட்டார். இந்நிகழ்வில் இராஜாங்க அமைச்சர் பாலித்த ரங்கே பண்டார, பிரதி அமைச்சர் இந்திக்க பன்டார நாயக்க, வடமேல் மாகாண முதலமைச்சர் தர்மசிறி தசநாயக்க, மாகாண அமைச்சர் சுமல் திசேரா உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகளும் அரச அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.

ITN News Editor
By ITN News Editor ஜூன் 14, 2018 11:38

வணிகம்- அனைத்தும் படிக்க

ஆய்வு- அனைத்தும் படிக்க

கட்டுரைகள்- அனைத்தும் படிக்க

நாணய மாற்று விகிதங்கள்

CountryBuyingSelling
Dollar179.39183.06
USA
Pound232.18239.41
UK
Euro197.73204.49
EU
Yen1.621.67
Japan
Yuan25.726.91
China
Dollar121.84126.92
Australia
CountryCurrencyRate
Dinar480.97
Dinar597.39
Riyal470.97
Riyal49.80
Riyal48.33
Dirham181.33