பங்களாதேஷ் அணிக்கெதிரான 3வது 20 – 20 போட்டியிலும் ஆப்கானிஸ்தான் அணி வெற்றி
Related Articles
பங்களாதேஷ் அணிக்கெதிரான மூன்றாவது டுவண்டி – 20 கிரிக்கெட் போட்டியிலும் ஆப்கானிஸ்தான் அணி வெற்றிப்பெற்றுள்ளது. இதன்மூலம் பங்களாதேஷ் அணியை, ஆப்கானிஸ்தான் அணி வெள்ளையடிப்பு செய்துள்ளது. மூன்றாவது போட்டி நேற்று இடம்பெற்றது. போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய ஆப்கானிஸ்தான் அணி 20 ஓவர்கள் நிறைவில், 6 விக்கட்டுக்களை இழந்து 145 ஓட்டங்களை பெற்றது. சமியுல்லா ஷென்வாரி 33 ஓட்டங்களையும், மொஹமட் சஷாட் 26 ஒட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர். பந்துவீச்சில் நஸ்முல் இஸ்லாம், அபு ஜாயிட் ஆகியோர் தலா இரு விக்கட்டுக்களை கைப்பற்றினர்.
இதேவேளை 146 ஓட்டங்களை வெற்றியிலக்காக நோக்கி துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் அணி 20 ஓவர்கள் நிறைவில், 6 விக்கட்டுக்களை இழந்து 144 ஓட்டங்களை மாத்திரமே பெற்று ஒரு ஓட்டத்தால் தோல்வியடைந்தது. போட்டி இறுதிவரை விறுவிறுப்பாக அமைந்திருந்தது. இறுதிப்பந்தில் 4 ஓட்டங்களை பெற்றால் வெற்றி என்ற நிலையில், துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் அணி வீரர் ஆரிப் உல் ஹக், ராஷிட் கான் வீசிய பந்தை வேகமாக அடித்தாடியிருந்தார். எனினும் எல்லைக்கோட்டில் வைத்து ஆப்கானிஸ்தான் வீரர் ஷபீக்குல்லா சிறப்பான முறையில் பந்தை தடுத்து ஆப்கானிஸ்தான் அணியின் வெற்றியை உறுதிசெய்தார். பங்களாதேஷ் சார்பாக முஷ்பிகியூர் ரஹீம் 46 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார். போட்டியின் ஆட்டநாயகனாகவும் அவரே தெரிவானார். தொடர் நாயகனாக ராஷிட் கான் தெரிவானார். இதேவேளை பங்களாதேஷ் அணியை வெள்ளையடிப்பு செய்த ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணிக்கு சர்வதேச ரீதியாக பலரும் பாராட்டுக்களை தெரிவித்துள்ளனர்.