நிட்டம்புவ பஸ்ஸியால முறுத்தவெல பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இருவர் உயிரிழந்தனர்.
கண்டியிலிருந்து கொழும்பு நோக்கி சென்ற தனியார் பஸ் ஒன்றும் கொழும்பிலிருந்து அநுராதபுரம் நோக்கி சென்ற தனியார் பஸ் ஒன்றும் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளானது. இவ்விபத்தில் கொழும்பு நோக்கி சென்று கொண்டிருந்த பஸ்ஸின் பின் ஆசனத்தில் பயணம் செய்த நபர்கள் இருவர் படுகாயமடைந்து வத்துபிட்டிவல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். இவர்களுக்கு சிகிக்சையளிக்கப்பட்டு வந்த போது உயிரிழந்தனர். மாவனெல்லையை சேர்ந்த 31 வயதுடைய இராணுவ வீரரரும் கேகாலையை சேர்ந்த 21 இளைஞர் ஒருவருமே இவ்விபத்தில் உயிரிழந்தனர். பஸ் வண்டியின் சாரதிகள் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கினிகத்ஹேனயிலிருந்து ஹட்டன் நோக்கி சென்று கொண்டிருந்த சிறிய லொறியொன்று மோதியதில் சிறுமியொருவர் காயமடைந்தார். குறித்த சிறுமி மஞ்சள் கடவையில் வீதியை கடக்கும் போது லொறியால் மோதப்பட்டு வீசி எறியப்பட்டார் இவர் தற்போது டிக்கோயா ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அதிக வேகத்துடன் சென்ற லொறி சறுக்கி சென்று விபத்தை ஏற்படுத்தியதாக பொலிஸார் தெரிவித்தனர்.