SHARE

சுனாமி 

சுனாமி என்ற வார்த்தையை, அறிவியல்படி சற்று அலசிப் பார்த்தால், அது ஜப்பானிய வார்த்தை என்பது தெளிவாகும். ‘ட்சு’ (Tsu) என்ற சிறு வார்த்தையும், ‘னாமி’ (nami) என்ற சிறு வார்த்தையும் சேர்ந்தது சுனாமி (Tsunami) ‘ட்சு’ என்ற என்பதற்குத் துறைமுகம் என்றும், ‘னாமி’ என்பதற்கு அலை என்றும் ஜப்பானிய மொழியில் பொருள். மொத்தத்தில், சுனாமி (Tsunami) என்பது துறைமுக அலை. ஜப்பானியத் துறைமுகங்களை, இப்பேரலைகள் பெரிதும் தாக்கி வந்தன.

பௌர்ணமி 

பௌர்ணமி (Full Moon), அமாவாசை (New Moon) ஆகிய நாட்களில் பூமி, சந்திரன், சூரியன் ஆகியவை, ஒரே நேர் கோட்டில் வருகின்றன.அப்போது பூமியின் புவி ஈர்ப்பு சக்திகளால் ஏற்படும் மாறுபாடுகளால், கடல் அலைகளில் கொந்தளிப்பு ஏற்படும். பூமியும், சூரியனும், சந்தரனும் நேர்கோட்டில் வரும் நாட்களில், கடல் அலைகள் வழக்கத்தைவிட அதிகமாகவும், உயரமாகவும் இருக்கும். இக்காலங்களில் கடல்நீர், கடற்கரையின் அலைபரவும் பகுதிகளில் அதிகமாய் பரவும். ஓதம் (Tide) எனப்படும் கடல்நீர் உயர்வு (High Tide), இக்காலங்களில் அதிகமிருக்கும். உப்பாறுகளில் கடல் நீர் அதிகம் ஏறிப் பாய்வதும், மூடிக்கிடக்கும் முகத்துவாரங்களை முட்டித் திறப்பதும் இக்காலங்களில்தான்.

இந்தியாவில் ஏற்பட்ட பூகம்பங்களும், இக்காலங்களில்தான் ஏற்பட்டன என்பன கவனிக்கத்தக்கவை. 20.8.1988இல் பீஹாரில் அமாவாசைக்கு முதல் நாள்தான் பூகம்பம் ஏற்பட்டது. 20.10.1991இல் மஹாராஷ்டிராவில் ஏற்பட்ட பூகம்பமும், 22.5.1997இல் சுபல்பூரில் ஏற்பட்ட பூகம்பமும், பௌர்ணமி தினத்தில்தான் ஏற்ட்டுள்ளன. தற்போது, கடலில் பூகம்பத்தை உண்டாக்கி, அதனால் சுனாமி வந்த 26.12.2004 அன்றும் பௌர்ணமி தினமே. பௌர்ணமி, ‘பவர்ஃபுல்’ (Powerful) தினம்தான் என்பதை, நிகழ்வுகள் நிலைநாட்டுகின்றன.

சுனாமி உண்டாகக் காரணங்கள்:

பூகம்பம்,  நிலச்சரிவு, எரிமலை, விண்ணிலிருந்து கடலில் விழும் விண்கற்கள் ஆகியவை சுனாமி உண்டாகக் காரணங்கள்.

உலகின் முக்கிய சுனாமிகளும் ஏற்பட்ட உயிரிழப்புகளும்:

சென்ற நூற்றாண்டில், ஏறத்தாழ 800 சுனாமிகள் உலகில் ஏற்பட்டிருந்தாலும், கடந்த 200 ஆண்டுகளில், பெரும் பாதிப்பை ஏற்படுத்தியவையாக, 17 சுனாமிகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அவற்றுள் முக்கியமானவற்றைக் கீழே பட்டியலில் காண்க.

உயிரிழந்தோர்கள்:

1. 1707இல் ஜப்பான் 30,000 மக்கள்.
2. 1758இல் ஸ்பெயின் 60,000 மக்கள்.
3. 1883இல் இந்தோனேசியா 33,000 மக்கள்.
4. 1960இல் சிலி 2,000 மக்கள்.
” ஹாவாய் 61 மக்கள்.
” ஜப்பான் 122 மக்கள்.
5. 1979இல் கலிபோர்னியா அலாஸ்கா 10 மக்கள்.
6. 1979இல் மத்திய தரைக்கடல் (ப்ரெஞ்ச், நிபேரியா).
7. 1986இல் ஜப்பானில் 27,000 மக்கள்.
8. 2004ல் இந்தோனேசியா இலங்கை, இந்தியாஉட்பட 13 நாடுகள் 2,00,000 மக்கள்.

1946இல் அலாஸ்காவில் ஏற்பட்ட சுனாமி அலையின் உயரம், 500 மீட்டர் (½ கி.மீ.) என்பது பயங்கரமானது. அதுதான் அலாஸ்காவையே அமுக்கிப் போட்டது.

சுனாமியும் – பாதுகாப்பும்:

1. சுனாமிப் பேரலை வருவதை, 2-3மணி நேரங்களுக்கு முன்னரே தெரிவக்க முடியும் என்பதால், மக்கள் தம்மைக் காத்துக்கொள்ள முடியும்.

2. பொதுவாக, சுனாமி அலை வருவதற்கு முன்பாக, கடல் உள்வாங்கும். அப்போது, ஆச்சரியப்பட்டுக் கடலடியில் தெரியும் மணலையும், பவளப்பாறைகளையும், துள்ளும் மீன்களையும் காணும் ஆசையுடன், உள்ளே சென்று விடாதீர்கள். கடல் உள்வாங்குவதைத் தொடர்ந்து தான் சுனாமியின் ஆவேச அலை வரும்.

3. சுனாமிப் பேரலை வருவதன் அறிவிப்பைப் பெற்றதும், மிக மிக முக்கியமானவற்றை மட்டும் எடுத்துக் கொண்டு, வீட்டைப் பூட்டிவிட்டு, கடலைவிட்டுத் தூரமான, உயரமான இடங்களுக்கு உடனடியாகச் சென்றுவிட வேண்டும்.

4. கால அவகாசம் குறைவென்பதால், நிலமைகளுக்கேற்ப, அண்மையிலுள்ள பலமான, உயரமான கட்டிடங்களில் ஏறி அடைக்கலம் பெறலாம்.

5. சுனாமி வரும்வேளையில், நீங்கள் கடற்கரையில் இருந்தால், உடனடியாகக் கடற்கரையை விட்டு ஓடி விடுங்கள். வேகமான நடை எல்லாம் உதவாது. ஓட்டமும் கூட அப்படித்தான், வாகனம் இருந்தால், அதில் ஏறி நகரின, – நாட்டின் உட்பகுதிக்குச் சென்று விடுங்கள்.

6. வருவது சுனாமி என்றாலும், ஒருபோதும் பயப்படாதிருங்கள். நடுங்கிவிடாதீர்கள். பயமும் பதட்டமும், சரியாகச் செயல்பட விடாது. பயம் இருந்தால் செயல்பட முடியாது. எனவே, அச்சம் தவிர்!

7. குழந்தைகளையும், மகளிரையும், பெரியோரையும் முதலில் பாதுகாப்பதற்கு, சரியான நடவடிக்கையை உடனடியாய் மேற்கொள்ளுங்கள்.

8. தப்பிச்செல்கையில், சாலை வழிதான் செல்ல வேண்டும் என்ற கட்டாயமெல்லாம் இப்போது இல்லை. எந்தக் குறுக்கு வழியானாலும், பாதுகாப்பை மட்டும் மனதில் வைத்து, நேரத்தின் அருமையையும் நினைத்து, பாதுகாப்பான இடத்தை அடைந்துவிடுங்கள்.

9. உங்கள் உடமைகளை, வீட்டுப் பொருட்களைப் பற்றிக் கவலைப்படாதிருங்கள். உங்கள் உயிர் பெரிதென்பதை மறவாமல், உடனடியாகத் தப்பிச் செல்ல வழி பாருங்கள். பொருளை, என்றைக்கும் சோத்து கொள்ளலாம். உயிர் …!

10. தப்பித்து ஓடும்போது, சுனாமி நெருங்கிவிட்டால், அருகிலிருக்கும் மரங்களைக் கட்டிப் பிடித்துக் கொள்ளுங்கள். மரத்தில் ஏறிவிடுங்கள். சுனாமியின் கைகளுக்கு எட்டாத தூரத்துக்கும் உயரத்துக்கும் சென்றுவிட்டால், சுனாமியால் நம்மை ஒன்றும் செய்ய முடியாது.

11. கடலோரக் குடியிருப்புக்கான வீடுகளை, பாதுகாப்பான இடங்களிலேயே (தூரமான இடத்திலும், உயரமான இடத்திலும்) அமையுங்கள்.

12. சுனாமி அலை, ஒரு அலை அல்ல. சுனாமி அலைகள் தொடர் அலைகளாய் வரும். அலைகள் தொடர்ந்து வரலாம். எனவே, பாதுகாப்பான பகுதியிலேயே இருங்கள்.

13. கடற்கரை ஓரங்களில், சுனாமி அலைகளைக் கட்டுப்படுத்தும் சதுப்பு நிலக்காடுகளை, இயற்கை அரண்களாகக் கடலோரமெங்கும் அமைத்திட முற்படுகள். (இப்பணியை. கடலோர மக்களின் ஈடுபாட்டுடன், பாதுகாப்புத் திட்டங்களாய் அரசினர் மிக முக்கியத்துவம் தந்து செயல்படுத்த வேண்டும்).

14. சாத்தியமான பகுதிகளில், மணல் குன்றுகளைத் (Sand Dunes) தொடராய் அமைக்க வேண்டும்.

15. மணற்பாங்கான பகுதிகளில், சவுக்குமரக் காடுகளையும், மணற்குன்றுகளைக் காக்கும்படி வளர்க்கலாம்.

16. மக்கள் குடியிருப்பு அதிகமாகிவிட்ட பகுதிகளில், அலைகளைக் கட்டுப்படுத்த, பெருங்கற்களைக் குவித்தும், அரண்களை அமைத்தும் பாதுகாப்பை வலுப்படுத்தலாம்.


இணையம்

LEAVE A REPLY