SHARE

பல கோரிக்கைகளை முன்வைத்து புகையிரத சாரதிகள் மற்றும் காவலர்கள் முன்னெடுத்த வேலைநிறுத்தம் உடனடியாக முடிவுக்கு கொண்டுவர தீர்மானிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களது ஆலோசனைக்கமைய ஜனாதிபதியின் செயலாளர் ஒஸ்ரின் பெர்ணான்டோவுக்கும் புகையிரத தொழிற்சங்க பிரதிநிதிகளுக்குமிடையில் இன்று (12) மாலை ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற பேச்சுவார்த்தையின் பின்னர் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

போக்குவரத்து அமைச்சின் செயலாளர் தலைமையிலான  எட்டு உறுப்பினர்களைக் கொண்ட குழுவை  நியமித்து குறித்த பிரச்சினைகள் தொடர்பாக கலந்துரையாடுவதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

போக்குவரத்து அமைச்சின் செயலாளர், பொது நிர்வாக அமைச்சின் செயலாளர் உள்ளிட்ட அலுவலர்கள் பேச்சுவார்த்தையில் கலந்து கொண்டனர்.

ரயில்வே ஊழியர்களின் தொழிற்சங்க போராட்டத்திற்கு மக்கள் எதிர்ப்பு

ரயில்வே ஊழியர்களின் தொழிற்சங்க போராட்டத்திற்கு மக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். மக்களுக்கு அழுத்தங்கள் ஏற்படுத்தும் தொழிற்சங்க போராட்டத்தை தடுப்பதற்கான காலம் தற்போது ஏற்பட்டுள்ளதாக அவர்கள தெரிவித்துள்ளனர். பொதுமக்களின நிதியில் தங்கியுள்ள இது போன்ற சங்கங்களால் மேற்கொள்ளப்பட்டு வரும் நியாயமற்ற போராட்டங்களை தடுப்பதற்கு அரசாங்கம் முன்வர வேண்டுமெனவும் அம்மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ரயில்வே சாரதிகளும் பாதுகாவலர்களும் முன் அறிவிப்பின்றி நேற்று ஆரம்பித்த திடீர் தொழிற்சங்க நடவடிக்கைகளால் மக்கள் பெரும் அசௌகரியங்களை எதிர்கொண்டனர். இரவு நேரத்தில் திடீரென ரயில்கள் இயங்காமையினால் மக்கள் மத்தியில் பெரும் பதற்ற நிலை ஏற்பட்டது.

ரயில் சேவை தாமதம் மற்றும் சேவைகள் ரத்துச் செய்யப்பட்டமை பயணிகள் அமைதி இழந்ததனால் கோட்டை ரயில் நிலையத்தில் அசாதாரண சூழ்நிலை ஏற்பட்டது. மருதானை ரயில் நிலையத்திலும் பயணிகள் மத்தியில் அமைதியின்மை காணப்பட்டதால் அங்கும் நிலைமை மோசமடைந்தது.

நிலைமையை கட்டுப்படுத்துவதற்காக விசேட பொலிஸ் குழுவினர் அழைக்கப்பட்டனர். ரயில் நிலையங்களில் இருந்த பயணிகள் பஸ் வண்டிகள் மூலம நேற்று உரிய இடங்களுக்கு பொலிஸாரினால் அனுப்பி வைக்கப்பட்டனர்.


புகையிரத வேலைநிறுத்தம் தொடர்கிறது

புகையிரதச் சாரதிகள் மற்றும் பாதுகாப்பு அதிகாரிகள் திடீர் வேலைநிறுத்தத்தில் இறங்கியுள்ளனர். கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்தில் இருந்து ஆரம்பிக்கும் ரயில் சேவைகள் அனைத்தும் இரத்துச் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், பயணிகள் பெரும் அசௌகாரியத்தை எதிர்நோக்கியுள்ளனர்.

 

LEAVE A REPLY