SHARE

அரசியல் ஆதாயத்திற்காக கடந்த அரசாங்கம் எல்லை நிர்ணய பணிகளை மேற்கொண்டதனால் உள்ளுராட்சி மன்ற தேர்தலை நடத்துவதில் தடை ஏற்பட்டுள்ளதாக அமைச்சர் வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார். இந்நிலையை போக்க நடவடிக்கை எடுக்கப்படுமெனவும் அவர் கூறினார். வவுனியா மாவட்டத்தில் இடம்பெறவுள்ள ஜனாதிபதி மக்கள் சேவை தேசிய வேலைத்திட்டம் தொடர்பாக அமைச்சர் தலைமையில் விளக்கங்கள் அளிக்கப்பட்டன.

தொடர்ந்தும் அவர் கூறுகையில்

5 வருடங்களுக்கு ஒரு முறை எல்லை நிர்ணயம் தொடர்பான வர்த்தமானி வெளியிடப்படும் வெளிவிவகார அமைச்சினால் இவ்வாறு வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்படும். 2012 ஆம் ஆண்டு இறுதியாக எல்லை நிர்ணயம் தொடர்பாக வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டது. மக்கள் தொகை மற்றும் புவியியல் ரீதியிலான மாற்றங்களின் அடிப்படையிலேயே எல்லைகள் நிர்ணயிக்கப்படும். ஆனால் 2012 ஆம் ஆண்டு இதனடிப்படையில் எல்லை நிர்ணயம் பணிகள் இடம்பெறவில்லை. அரசியல் காரணங்களுக்காக எல்லை நிர்ணய பணிகளில் அப்போது மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டன. அப்போதைய அரசாங்கம் 2015 ஆம் ஆண்டு ஜனவரி 8 ஆம் திகதி ஆட்சி மாற்றம் ஏற்படும் வரை அமைச்சரவைக்கு எவ்வித தகவலையும் தெரிவிக்கவில்லை. அத்துடன் வர்த்தமானியும் வெளியிடப்படவில்லை. இதனால் முழு நாட்டிலும் உள்ளுராட்சி மன்ற தேர்தல் தொடர்பில் பெரும் பிரச்சினைகள் தோன்றியுள்ளன. இவ்வருடம் வர்த்தமானி வெளியிடப்படும். இப்பிரச்சினைக்கு மக்களின் கருத்துக்களுடன் தீர்வுகள் காணப்படும் எனக் கூறினார்.

ஜனாதிபதி உத்தியோகபூர்வ நடமாடும் சேவையின் வவுனியா மாவட்ட செயல்த்திட்டம் தொடர்பாக அரச அதிகாரிகளுக்கு தெளிவுப்படுத்தும் நிகழ்வு அமைச்சர் வஜிர அபேவர்தன தலைமையில் நடைபெற்றது. வவுனியா ரம்பை குளம் மகா வித்தியாலயத்தில் இடம்பெற்ற இக்கூட்டத்தில் வவுனியா, மன்னார், மாவட்ட செயலாளர்கள், பிரதேச செயலாளர்கள், கிராம சேவக அதிகாரிகள், அரசாங்க அதிகாரிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர். இத்திட்டத்திற்காக மாவட்ட மட்டத்தில் ஏராளமான அதிகாரிகள் இணைத்துக் கொள்ளப்படவுள்ளதாக அவர் தெரிவித்தார்.

LEAVE A REPLY