SHARE

பழுதடைந்த பத்தாயிரம் லீட்டர் பசும்பால் காசல்ரீ நீர்த்தேக்கத்தில் விடுவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து சந்தேகநபர் ஒருவர் ஹட்டன் பொலிசாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

காசல்ரீ நீர்த்தேக்கத்திற்கு ஹட்டனிலிருந்து நீர்செல்லும் பிரதான மார்க்கமாக டிக்கோயா காணப்படுகின்றது. இதற்கு பழுதடைந்த பசும்பால் கலக்கப்பட்டதனால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசுவதுடன், பாரிய அளவில் சுற்றாடலும் மாசடைந்துள்ளது. இன்று காலை ஐந்து மணியளவிலேயே இவ்வாறு பசும்பால் கலக்கப்பட்டிருப்பதாக பொலிசார் தெரிவிக்கின்றனர். பால் சேகரிக்கும் மத்திய நிலையம் ஒன்றிலிருந்து பால் உற்பத்தி செய்யும் கம்பனியொன்றுக்கு வழங்கப்பட்ட பத்தாயிரம் லீட்டர் பால் பழுதடைந்துள்ளதாக கூறி அவற்றை ஏற்றுக்கொள்வதை நிராகரித்துள்ளது. இதற்கமைய மீண்டும் பால் சேகரிக்கும் மத்திய நிலையத்திற்கு எடுத்துவரப்பட்ட பழுதடைந்த பசும்பாலே இவ்வாறு காசல்ரீ நீர்த்தேக்கத்திற்கு விடுவிக்கப்பட்டுள்ளது.

மலையகத்தில் நிலவுகின்ற வறட்சியுடனான காலநிலையை தொடர்ந்து டிக்கோயாவில் நீர்மட்டம் குறைவடைந்துள்ளதால் காசல்ரீ நீர்த்தேக்கத்திற்கு மெதுவாகவே நீர் பாய்ச்சப்படுகின்றது. எவ்வாறாயினும் சேகரிக்கப்பட்ட பசும்பால் தாங்கி புரண்டதால் டிக்கோயாவில் பால் கலக்கப்பட்டதாக பால் சேகரிக்கும் மத்திய நிலையத்தின் ஊழியர்கள் தெரிவித்துள்ளனர். எனினும் சேகரிக்கப்படும் பால் தாங்கியொன்றுக்கு நிரப்பும் போது அதன் குழாய் ஒன்று வெடித்தமையால் நீர்த்தேக்கத்திற்கு பசும்பால் கலக்கப்பட்டதாக நிறுவனத்தின் முகாமையாளர் தெரிவித்துள்ளார். இருதரப்பினர்களதும் கருத்துக்கள் ஒன்றுடன் ஒன்று முரண்பட்டவைகளாக காணப்படுவதால் பால் சேகரிப்பு நிலையத்தின் உரிமையாளர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டார். எவ்வாறாயினும் தற்போது காசல்ரீ நீர்த்தேக்கத்தின் நீர் மாசடைந்துள்ளதாக பிரதேசவாசிகள் தெரிவிக்கின்றனர்.

LEAVE A REPLY