SHARE

இவ்வருடத்தின் முதல் பத்து நாட்களில் ஆயிரம் டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவு அறிவித்துள்ளது.

சுகாதார அமைச்சும், தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவும் இணைந்து நடைமுறைப்படுத்திய டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டத்தின் இறுதி அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

இந்த அறிக்கையில் 22 இலட்சத்து 98 ஆயிரத்திற்கும் அதிகமான வளாகங்கள் பரிசோதிக்கப்பட்டுள்ளன. இதில் டெங்கு நுளம்புக் குடம்பிகள் உருவான 40 ஆயிரத்திற்கும் அதிகமான இடங்கள் இனங்காணப்பட்டிருப்பதாகவும் தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவு தெரிவித்துள்ளது.

டெங்கு நுளம்புகள் பரவும் வகையில் சுற்றாடலை வைத்திருப்போருக்கு எதிராக விதிக்கப்படும் தண்டப் பணத்தில் திருத்தங்களை மேற்கொள்வது பற்றியும் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

13 ஆயிரம் பேருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 90 ஆயிரத்திற்கும் அதிகமானோருக்கு எச்சரிக்கை அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.

டெங்கு நுளம்புக் குடம்பிகள் கண்டு பிடிக்கப்பட்டுள்ள 81 பாடசாலைகளுக்கும், 713 தனியார் நிறுவனங்களுக்கும் எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சுகாதார அமைச்சின் கோரிக்கைக்கு அமைய டெங்கு நுளம்புகள் அற்ற பாடசாலைகளை நடத்துவதற்கு சுற்றுநிருபம் சகல அதிபர்களுக்கும் அனுப்பப்பட்டுள்ளதாகவும் சுகாதார அமைச்சின் தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவு தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY