SHARE

ஈரான்-ஈராக் நாடுகளின் எல்லையில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இதில் 400 பேர் பலியாயினர். 6 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.நேற்று முன்தினம் இரவு திடீரென்று இப்பகுதியில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. பூமிக்கு அடியில் 23.2 கிலோ மீட்டர் ஆழத்தில் 31 கிலோ மீட்டர் சுற்றளவிற்கு மையம் கொண்டிருந்த இந்த நிலநடுக்கம் ரிக்டர்; 7.3 புள்ளியாக பதிவானது. இந்த நிலநடுக்கம் சில வினாடிகள் நீடித்தது. நிலநடுக்கத்தின்போது உண்டான அதிர்வு சத்தம் மத்திய தரைக்கடல் பகுதியிலும், ஈராக் தலைநகர் பாக்தாத்திலும் உணரப்பட்டது.எனினும் பலத்த நில அதிர்வு காரணமாக 10 கிராமங்களில் ஆயிரக்கணக்கான வீடுகள் இடிந்து தரைமட்டம் ஆயின. ஈரானின் சர்போல் -இ ஜகாப் என்ற சிறுநகரம் முற்றிலுமாக சேதம் அடைந்தது. அங்குள்ள 2 மருத்துவமனைகளும் பலத்த சேதம் அடைந்ததால் நிலநடுக்கத்தில் காயம் அடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிக்க முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது.இந்த நிலநடுக்கத்தில் ஈரானில் 380 பேரும், ஈராக்கில் 20 பேரும் பரிதாபமாக உயிர் இழந்தனர். இடிபாடுகளுக்குள் 6 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் சிக்கி படுகாயம் அடைந்தனர். இவர்களில் 400 பேர் ஈராக்கியவர்கள் ஆவர். பலியானவர்களில் பெரும்பாலானோர் மலைப்பகுதியில் கால்நடைகள் வளர்ப்பு தொழிலை வாழ்வாதாரமாக கொண்டவர்கள் ஆவர்.நிலநடுக்கம் ஏற்பட்ட சில மணி நேரங்களில் மீட்பு, நிவாரண பணிகளில் இரு நாடுகளின் ராணுவமும் இறங்கின. ஈராக் பிரதமர் ஹைதர் அல்-அபாதி உடனடியாக தேசிய பேரிடர் படையினரை ஜக்ரோஸ் பகுதிக்கு அனுப்பி வைத்தார். ஈரானில் 2003-ம் ஆண்டு ஏற்பட்ட நிலநடுக்கத்தில் பாம் என்ற நகரில் 26 ஆயிரம் பேர் பலியாயினர் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY