பாராளுமன்றம் மீண்டும் நாளை 1.30 மணிக்கு கூடவுள்ளது. கட்சித்தலைவர்களுக்கிடையில் இன்று இடம்பெற்ற கலந்துரையாடல்களுக்கு பின்னர் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக சபாநாயகர் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. இன்றைய தினம் காலை பாராளுமன்றம் கூடிய பின்னர் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ உரை நிகழ்த்தினார். அதனையடுத்து ஐக்கிய தேசிய கட்சி பாராளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியல்ல பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் உரை மீது நம்பிக்கை இல்லையெனவும், அவரது அரசுக்கெதிரான நம்பிக்கையில்லா பிரேரணையில் பெயர் குறிப்பிட்டு வாக்களிப்பு நடத்துமாறு சபாநாயகரிடம் கோரினார். இந்நிலையில் சபையின் பெரும்பான்மையான உறுப்பினர்கள் அதற்கு ஆதரவு தெரிவித்த நிலையில், சபாநாயகர் பெயர் குறிப்பிட்டு வாக்களிக்குமாறு கோரினார். அதன் பின்னர் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு உறுப்பினர்கள் அதற்கு எதிர்ப்பு தெரிவித்ததையடுத்து பாராளுமன்றத்தில் பெரும் அமளிதுமளி ஏற்பட்டது. அதனையடுத்து கட்சி தலைவர்களுக்கும், சபாநாயகருக்குமிடையில் விசேட கலந்துரையாடலொன்று இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.
பாராளுமன்றத்தில் தற்போது அமளிதுமளியான நிலை
பாராளுமன்றத்தில் தற்போது அமளிதுமளியான நிலை காணப்படுகின்றது. இன்று காலை 10 மணிக்கு பாராளுமன்ற அமர்வு ஆரம்பமானது. அதன்போது பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தனது உரையினை நிகழ்த்தினார். அதன்போது சபாநாயகரின் நேற்றைய செயற்பாடு குறித்து தான் கவலையடைவதாக அவர் சுட்டிக்காட்டினார். தற்போது இருதரப்புக்கு இடையில் பிரச்சினை காணப்படுகின்றது. அதனால் பாராளுமன்றத்தில் உள்ள அனைவரும் தன்னோடு இணைந்து பொதுத்தேர்தலுக்கு செல்வதற்கான இணக்கப்பாட்டுக்கு வரவேண்டுமென அவர் தெரிவித்தார். இதன்பின்னர் கருத்து தெரிவித்த ஐக்கிய தேசிய கட்சி பாராளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல பாராளமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்ஷவின் உரைமீது தமக்கு நம்பிக்கையில்லையென குறிப்பிட்டார். இதனால் அவருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணைக்கு பெயர் குறிப்பிட்டு வாக்களிக்க சபையில் முன்மொழிவதாக லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்தார். இதற்கு ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் பாராளுமன்றத்தில் தற்போது அமளிதுமளியான நிலைகாணப்படுவதாக எமது பாராளுமன்ற செய்தியாளர் தெரிவித்தார்.
[ot-video type=”youtube” url=”https://www.facebook.com/itnnews.lk/videos/352538505312763/”]
[ot-video type=”youtube” url=”https://www.facebook.com/itnnews.lk/videos/697145187332233/”]