Life+News The Official News Portal of Independent Television Network Ltd

கிழக்கின் விடிவெள்ளி மறைந்து 18 வருடங்களாகிறது

ITN News Editor
By ITN News Editor செப்டம்பர் 16, 2018 19:40

கிழக்கின் விடிவெள்ளி மறைந்து 18 வருடங்களாகிறது

ஸ்ரீ லங்கா முஸ்ஸிம் காங்கிரஸின் ஸ்தாபக தலைவர் மாமனிதர் மர்ஹூம் எம்.எச்.எம். அஷ்ரபின் 18வது நினைவு தினம் இன்றாகும்.

முஸ்லிம் அரசியல் வரலாற்றில் வடக்கு கிழக்கு அரசியலை நோக்கும் போது மர்ஹூம் அஷ்ரப்பின் யுகத்திற்கு முன்னர் வடக்கு கிழக்கு முஸ்லிம்களுக்கு என தனித்துவமான தலைவர்கள் உருவாகவில்லை. அவரது யுகத்திற்கு முன்னர் இலங்கையில் அகில இலங்கை மலாய் அரசியல் யூனியன், இஸ்லாமிய முற்போக்கு முன்னணி, முஸ்லிம் ஐக்கிய விடுதலை முன்னணி, அசீஸ் ஜனநாயக தொழிலாளர் காங்கிரஸ், ஐக்கிய மக்கள் முன்னணி போன்ற அமைப்புக்களும் கட்சிகளும் உருவாக்கப்பட்டன. ஆனால் இக்கட்சிகளின் தலைமைகளால் முஸ்லிம் சமூகம் எதிர்நோக்கிய பிரச்சினைகளுக்கு முழுமையான தீர்வை பெற்று கொடுக்க முடியவில்லை. இக்கட்சிகள் இணைந்து செயற்படவும் இல்லை. இதனால் முஸ்லிம்களின் அரசியல் பலவீனமடைந்ததுடன், வாக்கு பலமும் சிதறடிக்கப்பட்டது. 1982ஆம் ஆண்டு முஸ்லிம் காங்கிரஸ் உதயமானது. இது வடக்கு கிழக்கு முஸ்லிம்களின் அரசியல் வரலாற்றில் திருப்பத்தை ஏற்படுத்தியது. வடக்கு கிழக்கு முஸ்லிம்களின் அரசியல் வரலாற்று திருப்பத்திற்கும்,  அப்போதைய ஐதேகவின் ஆட்சிக்கும் வித்திட்ட ஆளுமை, மறைந்த ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபக தலைவர் எம்.எச்.எம். அஷ்ரப் என்பதை மறக்க முடியாது. அதனால் தான் வடக்கிழக்கு முஸ்லிம்கள் உட்பட நாடெங்கும் உள்ள மக்கள் அவரை நினைவுகூருகின்றனர். அம்பாறை மாவட்டத்தின் சம்மாந்துறை மண்ணின் 1948ஆம் ஆண்டு ஒக்டோபர் 23ஆம் திகதி பிறந்த அஷ்ரப் 2000மாம் ஆண்டு செப்டம்பர் மாதம் 16ஆம் திகதி தமது சமூகத்தின் எதிர்கால கனவுகளோடு விண்ணில் பறக்கையில் அரநாயக்க வான்பரப்பில் தனது 51வது அகவையில் அகால மரணமடைந்தார். முஸ்லிம் அரசியலில் மாத்திரமன்றி தேசிய அரசியலிலும் ஆளுமையின் அடையாளமாக விளங்கிய மர்ஹூம் எம்.எச்.எம். அஷ்ரப் மறைந்து இன்றுடன் 18 வருடங்கள் பூர்த்தியடைந்து விட்டன. அவரது காலத்தில் நாட்டின் முஸ்லிம் மக்களுக்கு ஆற்றிய சேவைகள் அளப்பரியன. 1981ஆம் ஆண்டு ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸை உருவாக்கிய அவர் அதனை 1986ஆம் ஆண்டு அரசியல் கட்சியாக பதிவு செய்தார். 14 வருடங்கள் அக்கட்சியின் தலைவராக செயற்பட்ட அவர் தனது செயல்திறன் மிக்க தலைமைத்துவ ஆளுமையினால் சாதித்தமை ஏராளம். உலகில் ஆயிரம் ஆயிரம் மனிதர்கள் பிறக்கின்றனர். அவ்வாறு பிறக்கின்ற எல்லோரையும் மக்கள் ஞாபகப்படுத்திக்கொள்வது இல்லை. மக்களுடன் மக்களாக வாழ்ந்து தங்கள் வாழ்க்கையை அவர்களுக்காக அர்ப்பணித்து அம்மக்களின் மனங்களை கொள்ளை கொண்ட சிலரே அம்மக்களால் மறக்கப்படாது தொடர்ந்தும் நினைவுவுகூரப்படுகின்றனர். அவ்வாறு இலங்கை மண்ணில் பிறந்து வாழ்ந்து மறைந்த பல்லாயிரம் மனிதர்களில் ஒருசிலரே மறைந்தும் மக்கள் மனதில் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். அவ்வாறான ஒரு தலைவரில் அஷ்ரபும் ஒருவர் என்றால் அது மிகையல்ல. மர்ஹூம் அஷ்ரபின் தேசிய மற்றும் சமூக ரீதியிலான இலக்கை அடைய அந்த மாபெரும் தலைவர் மறைந்த இந்த செப்டம்பர் 16ஆம் திகதியில் இருந்து அவரது சிந்தனையில் மலர்ந்த தேசிய சமாதானத்தை அடைவதற்கும், முஸ்லிம் சமூகத்தின் அபிலாஷைகளையும் எதிர்பார்புகளையும் பெற்று கொடுக்கப்பதற்கு முஸ்லிம் தலைவர்கள் அனைவரும் ஒன்றுப்பட்டு செயலாற்ற வேண்டுமென்பதே அம்மாபெரும் தலைவருக்கு செலுத்தும் நன்றிக்கடனாகும்.

ITN News Editor
By ITN News Editor செப்டம்பர் 16, 2018 19:40
Write a comment

No Comments

No Comments Yet!

Let me tell You a sad story ! There are no comments yet, but You can be first one to comment this article.

Write a comment
View comments

Write a comment

Your e-mail address will not be published.
Required fields are marked*

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க