பங்களாதேஷ் மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கிடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டம் இன்று நடைபெறவுள்ளது. இரு அணிகளும் இரண்டு டெஸ்ட், மூன்று ஒருநாள், மூன்று டுவண்டி – 20 போட்டிகளை கொண்ட தொடரில் விளையாடி வருகின்றன. இதற்கமைய முதல் டெஸ்ட் போட்டி நேற்று ஆரம்பமானது.
முதல் இனிங்ஸில் துடுபபெடுத்தாடிய பங்களாதேஷ் 43 ஓட்டங்களுக்கு சகல விக்கட்டுக்களையும் இழந்தது. அதற்கமைய டெஸ்ட் போட்டியொன்றில் பங்களாதேஷ் அணி ஒரு இனிங்ஸில் பெற்றுக்கொண்ட ஆகக்குறைந்த ஓட்டங்களாக இது பதிவாகியுள்ளது. லிட்டன் தாஸ் மாத்திரம் 25 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார். நான்கு வீரர்கள் ஓட்டம் எதையும் பெறாத நிலையிலும், ஏனைய சகல வீரர்களும் ஒற்றை இலக்க ஓட்டங்களோடும் ஆட்டமிழந்தனர்.
பந்துவீச்சில் கெமர் ரோச் 5 விக்கட்டுக்களையும், மிகுல் கமின்ஸ் மூன்று விக்கட்டுக்களையும் வீழ்த்தினர். பின்னர் தமது முதல் இனிங்ஸை ஆரம்பித்த மேற்கிந்திய தீவுகள் அணி நேற்றைய முதல் நாள் ஆட்டநேர நிறைவின்போது இரண்டு விக்கட்டுக்களை இழந்து 201 ஓட்டங்களை பெற்றுள்ளது. க்ரெக் ப்ரெத்வைட் ஆட்டமிழக்காமல் 88 ஓட்டங்களோடு களத்திலுள்ளார். டெவோன் ஸ்மித் 58 ஓட்டங்களோடும், கிரான் பவல் 48 ஓட்டங்களோடும் ஆட்டமிழந்தனர்.